எம்ஜிஆர் சிவாஜி கூட்டணி திரையிலும், தேர்தலிலும் அவுட்: வெற்றி வானில் பறக்காத கிளியும், புறாவும்…

எம்ஜிஆர், சிவாஜி கணேசன் இருவரும் தமிழ் திரையுலகின் 2 ஜாம்பவான்களாக திகழ்ந்தவர்கள். இவர்கள் எத்தனையோ வெற்றிப்பட நாயகர்களாக வலம் வந்தாலும், இருவரும் இணைந்து கூண்டுக்கிளி என ஒரேயொரு படம் மட்டுமே நடித்தார்கள். இருவரும் இணைவதால் படத்திற்கு செம வசூல் கிடைக்கும் என கருதப்பட்டது. படப்பெயர் ராசியோ என்னவோ? படம் வெளிவராமலே பெட்டிக்குள் முடங்கிக் கிடந்தது. பின்பு ஒரு மாதிரியாக பிரச்னையை சரி செய்து 1954ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இரண்டு டாப் ஹீரோக்கள் நடித்தும் படம் படுதோல்வி அடைந்தது. அதன்பின்னர் இருவருமே சேர்ந்து நடிக்கவில்லை. 1987ல் எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என அதிமுக இரண்டாக பிரிந்தது. இரு அணிகளும் தனித்தனியே 1989 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டன.

அப்போது காங்கிரசில் இருந்தார் சிவாஜி கணேசன். அந்த தேர்தலில் ஜானகி அணியை ஆதரிக்குமாறு காங்கிரஸ் தலைமையிடம் கோரினார். ஆனால், காங்கிரஸ், ஜெயலலிதா அணியோடு தேர்தலை சந்தித்தது. இதனால் விரக்தியடைந்த சிவாஜிகணேன், காங். கட்சியில் இருந்து பிரிந்து தமிழக முன்னேற்ற முன்னணி என்ற பெயரில் கட்சி தொடங்கினார். அந்த தேர்தலில் இக்கட்சி, ஜானகி அணியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. இத்தேர்தலில் ஜானகி அணி இரட்டைப்புறா சின்னத்தில் போட்டியிட்டது. திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட சிவாஜி தோல்வி அடைந்தார். இக்கூட்டணியும் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி பெறவில்லை. அந்த வகையில் எம்ஜிஆர் – சிவாஜி கூட்டணி திரையில் மட்டுமல்ல… அரசியலிலும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

* தலைவர்கள் இன்று…
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்) சேலம்
செல்வபெருந்தகை (காங்கிரஸ் மாநில தலைவர்) சென்னை
வைகோ(மதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
நயினார்நாகேந்திரன்(பாஜக தலைவர்) சென்னை
பெ.சண்முகம்(சி.பி.எம். மாநில செயலாளர்) சென்னை
மு.வீரபாண்டியன் (சி.பி.ஐ.மாநில செயலாளர்) சென்னை
திருமாவளவன் (வி.சி.க தலைவர்) டெல்லி
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்) சென்னை
அன்புமணி ராமதாஸ்(பாமக தலைவர்) சென்னை
ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்) டெல்லி
சீமான்(நாதக ஒருங்கிணைப்பாளர்) சென்னை
விஜய்(தவெக தலைவர்) பனையூர்.

Related Stories: