தலைவிரித்தாடும் ரீல்ஸ் விளம்பர மோகம் குப்பை வண்டியில் சென்று தவெக செயலாளர் பிரசாரம்

காரைக்குடி: ரீல்ஸ் மோகத்தில் காரைக்குடி மாநகராட்சி குப்பை வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த தவெக மாவட்டச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட தவெக செயலாளராக இருப்பவர் டாக்டர் பிரபு. பல் டாக்டரான இவர், காரைக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக கட்சி தலைமை அறிவிக்கும் முன்பே வாக்குச் சேகரித்து வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இதற்காகவே சம்பளம் கொடுத்து தனியாக இளைஞர்களை பணிக்கு அமர்த்தி வீடியோ எடுத்து வருகிறார். சிறிய வேலை செய்தாலும் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவார். கடந்த சில நாட்களாக வாக்கு சேகரித்து வரும் இவர், அடிக்கும் லூட்டிக்கு அளவில்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் நடத்திய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு, இவர் தனது கன்மேனுடன் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேபோல் சில நாட்களுக்கு முன் நடந்த முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின் போது கோயிலின் உட்புறத்தில் சுத்தம் செய்வது போல் வீடியோ பதிவிட்டுள்ளார். மறுநாள் மீண்டும் வீடியோ எடுக்க சென்றபோது அங்கு இருந்த தன்னார்வ பணியாளர்கள், ‘நீங்கள் ரீல்ஸ் எடுத்து போட்டதால் நாங்கள் வேலை செய்யவில்லையோ என எங்களை நிர்வாகம் சத்தம் போடுகிறார்கள்’ என கூறி திருப்பி அனுப்பினர். இந்நிலையில், காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள டீக்கடையில் இருந்தவர்கள் மற்றும் சாலையில் நடந்து சென்றோர்களிடம் பிரபு நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் வாக்கு சேகரித்த பிரபு, திடீரென அங்கு நின்று கொண்டிருந்த குப்பை வாங்கும் வாகன ஓட்டுனரை கீழே இறங்கும் படி கூறியுள்ளார்.

அவரும் என்னவென்றே தெரியாமல் கீழே இறங்கினார். உடனே பிரபு அந்த வாகனத்தில் ஏறிய ஓட்டி பெரியார் சிலை சிக்னல் வரை சென்று திரும்பினார். பிரபு வாகனம் ஓட்டுவதை இதற்கு என தயாராக இருந்த இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். ரீல்ஸ் மோகத்தில் மாநகராட்சி குப்பை வாகனத்தை ஓட்டி வாக்கு சேகரித்த தவெக பிரபுவின் செயலை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. தூய்மை பணியாளர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் எடுத்த இவர் மீது தேர்தல் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: