மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சிகளை வீழ்த்தி ‘மகாயுதி’ சாதனை: பலத்தை நிரூபித்த மறைந்த அஜித்பவாரின் கட்சி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலை விட இம்முறை அரசியல் களம் பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள 12ம் மாவட்டங்களில் 731 மாவட்ட ஊராட்சி இடங்களுக்கும் மற்றும் 1,462 ஊராட்சி ஒன்றிய இடங்களுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற்றது.

அண்மையில் காலமான முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாரின் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணியான பாஜக, சிவசேனா (ஷிண்டே) மற்றும் என்சிபி (அஜித் பவார்) கட்சிகள் அடங்கிய ‘மகாயுதி’ கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. ராய்காட், ரத்தினகிரி, சிந்துதுர்க், புனே, சதாரா, சாங்லி, சோலாப்பூர், கோலாப்பூர், சத்ரபதி சம்பாஜி நகர், பர்பானி, தாராஷிவ் மற்றும் லாத்தூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், மொத்தமுள்ள 731 மாவட்ட ஊராட்சி இடங்களில் 552 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சிகளை இக்கூட்டணி நிலைகுலையச் செய்துள்ளது.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக 225 இடங்களைக் கைப்பற்றி லாத்தூர், சதாரா மற்றும் சோலாப்பூர் உள்ளிட்ட 7 மாவட்ட ஊராட்சிகளில் முன்னிலை வகிக்கிறது. மறைந்த அஜித் பவாரின் என்சிபி கட்சி 165 இடங்களைப் பெற்று புனே கிராமப்புறங்களில் தனது பலத்தை நிரூபித்துள்ளது. துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 162 இடங்களைப் பிடித்து கொங்கன் மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி வெறும் 55ம் இடங்களுடன் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஊராட்சி ஒன்றிய இடங்களிலும் 1,000 இடங்களுக்கு மேல் மகாயுதி கூட்டணி வெற்றி வாகை சூடியுள்ளது.

இதில் பாஜக 459 இடங்களையும், என்சிபி 306 இடங்களையும், சிவசேனா 302 இடங்களையும் பெற்றுள்ளன. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 43 இடங்களையும், சரத் பவாரின் என்சிபி 26 இடங்களையும் பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் 97 ஊராட்சி ஒன்றிய இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளது.

Related Stories: