திரைத்துறையில் நடந்த கசப்பான சம்பவங்கள்; இனிமேல் அவதூறுகளை சுமக்க போவதில்லை: பிரபல மூத்த நடிகை உருக்கம்

மும்பை: கடந்த காலத்து திரைத்துறை விமர்சனங்கள் குறித்து நடிகை ஜீனத் அமன் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். கடந்த 1970 மற்றும் 1980ம் ஆண்டுகளில் இந்தியத் திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜீனத் அமன், அப்போதைய சமூகக் கட்டுப்பாடுகளையும் ஊடகங்களின் ஒருதலைப்பட்சமான விமர்சனங்களையும் எதிர்கொண்டார். திரையில் அவர் ஏற்ற துணிச்சலான மற்றும் ஆபாசமான கதாபாத்திரங்கள் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறையை வைத்து, அன்றைய சமூகம் அவரை ஒரு ‘ஒழுக்கக்கேடான பெண்’ என்று முத்திரை குத்தியது.

இதனால் அவர் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டதோடு, பல நேரங்களில் அவரது தொழில்முறை வாய்ப்புகளும் பறிக்கப்பட்ட கசப்பான சம்பவங்கள் கடந்த காலங்களில் அரங்கேறின. இந்தச் சூழலில், நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜீனத் அமன், அன்றைய காலத்தின் ஒருதலைப்பட்சமான விமர்சனங்ளைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

அதில், ‘அன்று அவதூறாகச் சித்தரிக்கப்பட்ட விஷயங்கள் இன்று ஒரு பெண்ணின் சுதந்திரமாகவும், தனித்துவமாகவும் பார்க்கப்படுவது காலத்தின் மாற்றம். எனது சுயமரியாதையைக் குறைத்து மதிப்பிட முயன்றனர். அதனை எனது மன உறுதியால் மீண்டு வந்தேன். இனிமேல் இத்தகைய அவதூறான முத்திரைகளை சுமந்து செல்லப் போவதில்லை. எனது வாழ்க்கைப் பயணத்தை இப்போது பெருமிதத்துடன் அணுகி வருகிறேன்’ என்று அந்த உருக்கமான பதிவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: