*துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் விரிவாக்கத்தை, திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை மாநகராட்சியில், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று திருவண்ணாமலை கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு அரங்கத்தில் நடந்தது. கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார்.
மேயர் நிர்மலாவேல்மாறன், மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், துணை சபாநாயகர், கலெக்டர், மேயர் உள்ளிட்டோர் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கியதோடு, அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.
அப்போது, தூய்மைப்பணியாளர்களின் நலனை பாதுகாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து திட்டங்களை நிறைவேற்றி வருவதாவும், அதில் உணவு வழங்கும் திட்டம் சிறப்பானது என துணை சபாநாயகர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில், மாநகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், பகுதி செயலாளர் பா.ஷெரீப் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதேபோல், செங்கம், போளூர், செய்யாறு, ஆரணி, வந்தவாசி ஆகிய நகராட்சிகளிலும், கீழ்பென்னாத்தூர், புதுப்பாளையம், சேத்துப்பட்டு, கண்ணமங்கலம், வேட்டவலம், களம்பூர், தேசூர், பெரணமல்லூர் ஆகிய பேரூராட்சிகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
