பெரம்பூர்: சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜவகர் நகர், சிவஇளங்கோ சாலையில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில், ரூ.11.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகம், பெரவள்ளூர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த காவல் அலுவலக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இதன்பிறகு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில், ரூ.2.82 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள எச்2 எஸ் வாயு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடியஐஓடி மூலம் செயல்படுத்தப்பட்ட தானியங்கி கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்தார். இதையடுத்து கொளத்தூர் ஜவகர் நகர், சிவ இளங்கோ சாலையில் பெருநகர சென்னை மாநகரட்சியின் மூலதன நிதியின் கீழ் 3.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 லட்சம் லிட்டர் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, நடைபாதை, இறகுப்பந்து விளையாட்டுத்திடல், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள புதிய நீருறிஞ்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில், அமைச்சர்பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தீரஜ்குமார், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு) வெங்கடராமன், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் பிரகாஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், சென்னை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வினய், பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக், கொளத்தூர் காவல் துணை ஆணையர் குமார், மண்டல குழு தலைவர் சரிதா, கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
