ராஜஸ்தானி தமிழ்நாடு சேவா விருதுகள்: 5 விருதாளர்களுக்கு 10 லட்சம் பரிசு தொகை!

தமிழகத்தின் சமூக, கலாச்சாரம் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சிக்கு தங்களது தன்னலமற்ற சேவையால் சிறந்த பங்களிப்பை வழங்கிய தனிநபர்கள், நிறுவனங்களை கவுரவித்து ‘ராஜஸ்தானி – தமிழ் சேவா’ விருதுகளை ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சுதாசேஷய்யன், மேற்கு மாம்பலம் பொது சுகாதார மையத் தலைவர் சுவாமி நாதன் ஐசன்ஹோவர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தலைமை ஓதுவார் பி.சற்குருநாதன், பயிர் அறக்கட்டளை தலைவர் வி.ஆராயி, வழக்கறிஞர் கே.ஆர்.ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். விருதாளர்களை ‘துக்ளக்’ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, ‘இந்து’ என்.ரவி, பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, பகவான் மகாவீர் அறக்கட்டளை நிறுவனர் சுகல்சந்த் ஜெயின் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு தேர்வு செய்திருந்தது.

இந்நிலையில், விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்றநீதிபதி ஆர்.மகாதேவன் தலைமை வகித்து, விருதாளர்களுக்கு ‘ராஜஸ்தானி – தமிழ் சேவா’விருதுகள், ரூ.2 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கி கவுரவித்தார்.

இதன் பின்னர் அவர் விழா மேடையில் பேசியதாவது: தன் மண் சார்ந்த மனிதர்களை கவுரவிப்பதே, பண்படுத்தப்பட்ட ஒரு சமுதாயத்தின் அடிப்படை தேவை. இந்த மண்ணின் உன்னதத்தை போற்றக்கூடிய விருதாளர்களை போற்றுகிறேன். ஒரு நாட்டின் வளம் அந்த நாட்டில் உள்ள கிராமங்களை வளப்படுத்துவ தன் வாயிலாகவே அமைகின்றன. பதவி பணம் அந்தஸ்து என அனைத்தும் வாழ்க்கையை உயர்த்தும், ஒரே நேரத்தில் அனைத்தும் உங்களை விட்டு விலகி போகும். அதனால் உங்கள் நிலைமை இதுதான் என்று உணர்ந்து தங்களின் செயல், வார்த்தை மற்றும் வாழ்வு இருக்க வேண்டும். விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாட்டின் தலைவர் நரேந்திர ஸ்ரீஸ்ரீமால் கூறுகையில், “தகுதியுள்ள நபர்களை அங்கீகரிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். வரும் ஆண்டுகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மக்களைக் கவுரவிக்கும் வகையில் இந்த ஆண்டு விருதுகளை எங்கள் சங்கம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்,” என்றார்.

ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகளின் ஒருங்கிணைப்பாளர் அனில் கிச்சா கூறுகையில், “விருதாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை நாங்கள் பின்பற்றிய மிகச்சிறந்த செயல்முறைகளில் ஒன்றாகும். மாநிலம் முழுவதிலும் உள்ள பொதுமக்களிடமிருந்தும் நிறுவனங்களிலிருந்தும் பரிந்துரைகளை வரவேற்பதில் தொடங்கி, பெறப்பட்ட 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை ஒரு தெரிவுக்குழு (Shortlisting Committee) ஆய்வு செய்தது. அதனைத் தொடர்ந்து, எஸ். குருமூர்த்தி (ஆசிரியர், துக்ளக் வார இதழ்) தலைமையிலான 5 பேர் கொண்ட நடுவர் குழு, 8 வெவ்வேறு பிரிவுகளில் இருந்து இறுதி 5 விருதாளர்களைத் தேர்வு செய்தது. நடுவர் குழுவின் முடிவில் எங்கள் சங்கம் எந்தத் தலையீடும் செய்யவில்லை,” என்று தெரிவித்தார்.

Related Stories: