கடலூர்: பண்ருட்டி அருகே சுந்தரபாண்டி பகுதியில் செங்கல் சூளையில் மண் சரிந்து பெண் தொழிலாளி சாந்தி(45) உயிரிழந்தார். செங்கல் சூளையில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி மண் எடுத்ததால் மண் சரிந்து சாந்தி உயிரிழந்தார். சாந்தி, நேற்று மாலை செங்கல் அறுக்க தோண்டப்பட்ட 10 அடி ஆழ பள்ளத்தில் நின்றுகொண்டு, மண்தோண்டினார். அப்போது சாந்தி மீது மண் சரிந்து மூடியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர்.
உடனடியாக ஜே.சி.பி., மூலம் சரிந்திருந்த மண்ணை அகற்றினர். மண்ணுக்கு அடியில் சாந்தி இறந்த நிலையில் கிடந்தார். செங்கல் சூளை உரிமையாளர் வேணுநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாந்தியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சூளை உரிமையாளரை கைது செய்ய வேண்டும், இறந்த சாந்தியின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இதனை தொடர்ந்து செங்கல்சூளை உரிமையாளர் வேணுநாதன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
