1000 மாணவ-மாணவிகள் புத்தகம் வாசித்து விழிப்புணர்வு பொருநை நெல்லை புத்தகத் திருவிழா இன்று துவக்கம்

நெல்லை : 9வது பொருநை நெல்லை புத்தக திருவிழா இன்று (பிப்.10) துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக பாளை. வஉசி மைதானத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் புத்தகம் வாசித்து வாசிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நெல்லையின் பண்பாட்டு அழகியலையும், வரலாற்று பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் விதமாக தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, 9வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா இன்று (10ம் தேதி) துவங்கி 22ம் தேதி வரை நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடக்கிறது.

நெல்லையில் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை அனைத்து தரப்பு மக்களிடமும் புத்தகங்கள் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தோடு புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் நடத்தப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சுவர் விளம்பர விழிப்புணர்வு பணிகள் சிவராம் கலைக்கூட மாணவ மாணவிகள் காகித ஓவியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, 1000 கல்லூரி மாணவ, மாணவிகள் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் அமர்ந்து புத்தகம் வாசித்து வாசிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்வில் தச்சல்லூர் மண்டல உதவி ஆணையர் மகாலட்சுமி, துணை கலெக்டர் (பயிற்சி) கேரேனாப்புக் லிதியா மாணவர்களுடன் இணைந்து புத்தகத்தினை வாசித்து புத்தக திறனாய்வு செய்தனர். இன்று துவங்கி பிப்.22ம் தேதி வரை தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் சுகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

புத்தக திருவிழாவில் இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக ஒவ்வொரு ஆளுமைகளின் செறிவான உரைகளும் எழுத்தாகத் தொகுக்கப்பட்டு தனி நூலாக வெளியிடப்பட உள்ளது. தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.

11 மணி முதல் 1 மணி வரை கைவினைப் பொருட்கள் பயிற்சிப் பட்டறை, இதழியல் பயிற்சிப் பட்டறை தினமும் நடக்கிறது. பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணிவரை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் மாலை 4.30 மணி முதல் 5.30 வரை கலை பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

தினமும் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தலைசிறந்த இலக்கிய ஆளுமைகளின் உரைகள் இடம் பெறுகிறது.

மூத்த எழுத்தாளர்கள் வண்ணதாசன், நாஞ்சில் நாடன், தமிழ்ச்செல்வன், எஸ்.ராமகிருஷ்ணன், முதல் இளம்தலைமுறை எழுத்தாளர்கள் செந்தில் ஜெகநாதன், வேல்முருகன் இளங்கோ, திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் என பல்வேறு ஆளுமைகள் கலந்து கொள்கின்றனர். இரவு 8 மணிக்கு மேல் பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள், இசையரங்கங்கள் நடக்கின்றன.

115 பதிப்பகங்கள்

புத்தகத் திருவிழாவில் 115 முன்னணி பதிப்பகங்கள் பங்கேற்கிறது. இதில் இலக்கியம், போட்டித்தேர்வுகள், சுயமுன்னேற்றம் மற்றும் ஆங்கில நூல்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான நூல் அரங்குகள் அமைகிறது. புத்தகங்களோடு மட்டுமின்றி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அறிவியல் நிகழ்வுகள், பழங்காலப்பொருட்கள், ஓவியம், இயற்கை விளைபொருட்கள், உயர்கல்வி வழிகாட்டுதல் என பல்வேறு கண்காட்சிகள் புத்தகத் திருவிழா வளாகத்தின் தனித்தனி அரங்குகளில் நடக்கிறது.

தேர்தல் விழிப்புணர்வு

சட்டமன்றத் தேர்தல் ஓரிரு மாதங்களில் நடப்பதால் தேர்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியும்தனி அரங்கில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. மேலும் பண்டைய கால நாணய சேகரிப்பு, மகளிர் சுயஉதவிக் குழுவின் 20 சிறப்பு அரங்கங்கள், ஓவிய அரங்கம், சிறுதானிய உணவுப் பொருள் சார்ந்த அரங்கம் என பல்வேறு தனி அரங்கங்களும் புத்தக திருவிழாவில் இடம்பெறுகின்றன.

Related Stories: