மும்பை: 2026-ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தங்களது முதல் லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி நேபாளத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் (1 ரன்) ஷெர் மல்லாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இது மல்லா சர்வதேச கிரிக்கெட்டில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஜோஸ் பட்லர் (26 ரன்கள்) நந்தன் யாதவ் பந்துவீச்சில் வெளியேறினார். இருப்பினும், ஹாரி புரூக் மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை மீட்டெடுத்தது. பெத்தேல் 35 பந்துகளில் 55 ரன்களும் (4 பவுண்டரி, 4 சிக்ஸர்), புரூக் 32 பந்துகளில் 53 ரன்களும் (4 பவுண்டரி, 3 சிக்ஸர்) விளாசினர். இறுதியில் வில் ஜாக்ஸ் 18 பந்துகளில் 39* ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருக்க, இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நேபாள அணிக்கு ஆரம்பமே பின்னடைவு ஏற்பட்டது. தொடக்க வீரர்களான ஆசிப் ஷேக் (7) மற்றும் புர்தெல் (29) சீக்கிரம் ஆட்டமிழந்தனர்.
நடுவரிசையில் தீபேந்திர சிங் ஐரி (44 ரன்கள்) மற்றும் கேப்டன் ரோஹித் பவுடெல் (39 ரன்கள்) ஆகியோர் சிறப்பாக விளையாடி வெற்றிக்காகப் போராடினர். ஆனால், சாம் கர்ரன் வீசிய முக்கிய ஓவரில் ஐரி ஆட்டமிழந்ததும், லியாம் டவ்சன் பந்துவீச்சில் பவுடெல் வெளியேறியதும் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கடைசி வரை போராடிய நேபாளம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் மட்டுமே எடுத்து, வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
