கோலாலம்பூர்: பிரதமர்கள் மோடி-அன்வர் இப்ராகிம் முன்னிலையில் இந்தியா-மலேசியா இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் ஆழமான இருதரப்பு ஒத்துழைப்புக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று முன்தினம் சென்றார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணத்தின் 2ம் நாளான நேற்று பிரதமர் மோடி-மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் இருவரும் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி, மேம்பட்ட உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் ஆழமான ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் வகையில் 11 ஒப்பந்தங்கள் பிரதமர்கள் மோடி-அன்வர் இப்ராகிம் முன்னிலையில் கையெழுத்தாகின.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி கூறியதாவது:இந்தியா-மலேசியா உறவு சிறப்பானது. உலகளாவிய ஸ்திரமற்ற இந்தச் சூழலில், இந்தியா-மலேசியா இடையிலான வளர்ந்து வரும் நட்பு இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமானது. இருதரப்பு நம்பிக்கையின் மூலம் பொருளாதார மாற்றத்திற்கு நாங்கள் வழிவகுப்போம். நாங்கள் கடல் வழி அண்டை நாடுகள். பல நூற்றாண்டுகளாக நமது மக்களுக்கு இடையே ஆழமான, சுமூகமான உறவுகள் இருந்து வருகின்றன. மலேசியாவில் இந்திய துணைத் தூதரகத்தை நிறுவ நாங்கள் முடிவு செய்துள்ளோம். செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன், செமிகண்டக்டர், சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் கூட்டாண்மைகளை நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இருதரப்பிலும் உறுதி பூண்டுள்ளோம். தீவிரவாத எதிர்ப்பு, உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல், கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும். இருதரப்பும் பாதுகாப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்தும். தீவிரவாதம் குறித்த எங்கள் செய்தி தெளிவாக உள்ளது. இரட்டை நிலைப்பாடு இல்லை, சமரசமும் இல்லை. இந்தியா-மலேசியா உறவுகளுக்கான உங்கள் அர்ப்பணிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். வளமான மலேசியா குறித்த உங்கள் கனவையும், வளர்ந்த இந்தியாவுக்கான எங்கள் உறுதியையும் நாம் அனைவரும் இணைந்து நனவாக்குவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் பேசுகையில், ‘‘இந்தியாவுடன் ஒத்துழைக்க அதிக வழிகளையும் வாய்ப்புகளையும் பெற முடிந்தால், மலேசியா பெருமளவில் பயனடையும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சர்வதேச பொருளாதாரம் மற்றும் வர்த்தக அரங்கில் அற்புதமான எழுச்சி. எங்கள் இருதரப்பு வர்த்தகத்திற்கு உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்தும் முடிவு சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு மலேசியா தனது ஆதரவைத் தெரிவித்தது. மேலும் இரு பிரதமர்களின் கூட்டறிக்கையில், எல்லை தாண்டிய தீவிரவாதம் உட்பட அனைத்து வடிவங்களிலும் தீவிரவாதத்தை கடுமையாக கண்டிப்பதோடு, தீவிரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மைக்கு அழைப்பு விடுத்தனர். இப்பயணத்தில் இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, மலேசியாவின் முன்னணி தொழில் நிறுவன தலைவர்களை சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்ய வரவேற்றார். இத்துடன் 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி நேற்று மாலை மலேசியாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார்.
* இந்தியா-மலேசியாவை இணைக்கும் தமிழ் பாசம்
மோடி பேசுகையில், ‘‘இந்தியாவும் மலேசியாவும் தமிழ் மொழி மீதான பொதுவான பாசத்தால் இணைக்கப்பட்டுள்ளன. மலேசியாவில் தமிழ் மொழியின் வலுவான, துடிப்பான இருப்பு கல்வி, ஊடகம், கலாச்சார வாழ்வில் தெளிவாகத் தெரிகிறது’’ என்றார். முன்னதாக, பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட மதிய விருந்தின் போது, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நடித்த ‘நாளை நமதே’ திரைப்படத்தின் பாடல் இசைக்கப்பட்டது. அப்போது மோடி, ‘‘இந்தியாவில் நம்மில் பலரைப் போலவே, மலேசிய பிரதமர் அன்வரும் எம்ஜிஆரின் தீவிர ரசிகர்’’ எனக் கூறி, இதை தனது எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.
