ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளுக்கு மட்டுமே சிறப்பு தொழுகை நிபந்தனையை தளர்த்தக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

டெல்லி: ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளுக்கு மட்டுமே சிறப்பு தொழுகை நடத்த வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என இமாம் உசேன் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருப்பரங்குன்றம் நெல்லித்தோப்பு தர்காவில் ரம்ஜான், பக்ரீத் அன்று மட்டுமே சிறப்பு தொழுகை என்பதை எதிர்த்து மனு அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியிலுள்ள நெல்லித்தோப்பு தர்காவில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, ரம்ஜான் மற்றும் பக்ரீத் ஆகிய இரண்டு முக்கிய பண்டிகை நாட்களில் மட்டும் 100 சதவீதம் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

அனைத்து நாட்களிலும் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட இரு தினங்களுக்கு மட்டும் இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பிரசன்னா பி.வராலே ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லாத நிலையில் அனைத்து நாட்களிலும் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்’ என வாதிட்டார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘மத வழிபாடு விவகாரங்களில் நாங்கள் எப்படி தலையிட முடியும்’ எனக் கேள்வி எழுப்பியதுடன், உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: