ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு வெள்ளி!

புதுடெல்லி: ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் மனு பாக்கர் வெள்ளி, இஷா சிங் வெண்கலம் வென்றனர்.

ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில், இந்தியாவின் மனு பாக்கர், மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். போட்டியின் இறுதிவரை வியட்நாம் வீராங்கனை நுயென் துய் ட்ராங் மற்றும் மனு பாக்கர் இடையே கடும் போட்டி நிலவியது. நிர்ணயிக்கப்பட்ட சுற்றுகளின் முடிவில் இருவரும் 35 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க ‘ஷூட்-ஆஃப்’ முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ட்ராங் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைத் தட்டிச் செல்ல, மனு பாக்கர் நூலிழையில் முதலிடத்தைத் தவறவிட்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இந்தியாவின் ஈஷா சிங், ரிதம் சாங்வான் மற்றும் வியட்நாமின் ட்ராங் ஆகிய நால்வரும் பதக்கப் பட்டியலில் மாறி மாறி முன்னிலை வகித்தனர். தொடக்கத்தில் சிறப்பாகச் செயல்பட்ட ஈஷா சிங், எட்டாவது சுற்றின் முடிவில் 30 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார். ஆனால், ஒன்பதாவது சுற்றில் ஒரு இலக்கைக்கூடச் சரியாகச் சுடத் தவறியதால் அவரது தங்கப் பதக்கக் கனவு கலைந்தது. இறுதியில் அவர் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றில் ஈஷா சிங் 589 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிநபர் பிரிவுகளில் சவால்கள் இருந்தாலும், அணிகள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தினர். ஈஷா சிங், மனு பாக்கர் மற்றும் ரிதம் சாங்வான் ஆகியோர் அடங்கிய இந்தியக் கூட்டணி மொத்தம் 1,751 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கத்தை வென்றது. இந்தப் பட்டியலில் சீன தைபே அணி வெள்ளிப் பதக்கத்தையும், வியட்நாம் அணி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றன. இந்திய வீராங்கனைகளின் கூட்டு முயற்சி இந்தியாவிற்கு ஒரு கௌரவமான வெற்றியைத் தேடித்தந்தது.

Related Stories: