கனவுகளை நிஜமாக்கிய தையல் கலை!

நன்றி குங்குமம் தோழி

படித்தால் வேலை கிடைக்கும். அதே சமயம் பட்டப்படிப்பை பெறாதவர்களுக்கு கைத்தொழில் நம்பிக்கை மற்றும் கை கொடுக்கும் என்பதற்கு சிந்துவின் வாழ்க்கைதான் உதாரணம். சாதாரண இல்லத்தரசியாக இருந்தவர் இன்று தனக்கென்று ஒரு நிலையான வருமானத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்தது தையல் கலையினை. தான் மட்டும் இல்லாமல் தன்னிடம் வேலை பார்க்கும் பெண்களுக்கும் ஒரு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்தியுள்ளார்.

‘‘ஒக்கிலிபாளையம்தான் என்னுடைய சொந்த ஊர். நான் ஒரு சாதாரண இல்லத்தரசி. என் கணவர் வாகனம் ஓட்டும் வேலை பார்த்து வருகிறார். அவரின் வருமானத்தில்தான் குடும்பச் செலவு, குழந்தைகள் படிப்பு என அனைத்தும் பார்த்துக் கொள்வேன். வருமானம் குறைவு என்பதால் ஒவ்வொரு மாதமும் செலவினை சமாளிக்க எனக்கு பெரிய போராட்டமாக இருக்கும். எனக்கு தையல் கலை ஓரளவு தெரியும்.

ஆனால், அதைக் கொண்டு நிலையான வருமானம் பெறவும் அதற்கான பயிற்சியினை மேற்கொள்ளவும் எனக்கு ஆரம்பத்தில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லை என்பதை விட என்னால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதே சமயம் என் குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு என்னால் முடிந்த உதவியினை செய்ய வேண்டும் என்றும் என் மனதில் எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. குறிப்பாக என் குழந்தைகளின் எதிர்காலத்தினை மேம்படுத்த வேண்டும் என்று சிந்தனை என்னை ஆழமாக யோசிக்க வைத்தது’’ என்றவர் சரியான வழிக்காட்டல் இல்லாமல் தவித்துள்ளார்.

‘‘அந்த சமயத்தில்தான் ஒக்கிலிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் என் குழந்தை மூலமாக சுதா என்பவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அவர்தான் வாக்கரூ அறக்கட்டளை தையல் பயிற்சியினை அளிக்க இருப்பது குறித்து தெரிவித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை என மூன்று மாதம் தையல் பயிற்சி நடைபெறும் என்று கூறினார். என்ன செய்வது…

எப்படி என் குடும்பத்திற்கு உதவுவது என்று யோசித்துக் கொண்டு இருந்த நேரத்தில் இந்த செய்தி எனக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. கண்டிப்பாக இந்தப் பயிற்சி மூலம் என்னால் என் குடும்பத்திற்கு உதவ முடியும் என்ற நம்பிக்கையில் பயிற்சியில் சேர்ந்தேன். எனக்கு ஓரளவு தையல் தெரிந்திருந்தாலும் மூன்று மாத பயிற்சியில் முறையாக தையல் குறித்து ஒவ்வொரு விஷயங்களையும் முறையாக கற்றுக் கொண்டேன்.

அடிப்படை தையல்கள் துவங்கி, தலையணை உறைகள், பெண்களுக்கான நைட்டி, பட்டுப்பாவாடை, ஃபிராக், சுடிதார் என அனைத்து குறித்தும் அந்தப் பயிற்சியில் நான் கற்றுக் கொண்டேன். நான் கற்றதை வீட்டிலும் வந்து பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். என்னுடைய ஆர்வத்தினை பார்த்து பயிற்சியாளரும் எனக்கு ஊக்கமளித்ததால் நான் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ளவும் முடிந்தது. இப்படியாக அந்த மூன்று மாதங்களில் தையல் கலை குறித்து என் திறமையை முழுமையாக வளர்த்துக் கொண்டேன்’’ என்றவர், அதன் பிறகு பள்ளி மாணவர்களுக்கான பள்ளி சீருடைகளை தைப்பதற்கான ஆர்டர்களை பெற ஆரம்பித்தார்.

‘‘அறக்கட்டளை மூலம் நான் பயிற்சி பெற்றதால், அவர்கள் மூலமாகவே எனக்கு வருமானத்திற்கான வாய்ப்பும் கிடைத்தது. பள்ளி சீருடைகளை தைப்பதற்கான பல்க் ஆர்டர் எனக்குக் கிடைத்தது. அது மட்டுமில்லாமல் நான் உடைகளை தைப்பது பற்றி தெரிந்து கொண்டு என் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் என்னிடம் துணிகளை தைக்க கொடுக்க ஆரம்பித்தார்கள். இதனால் என்னுடைய வருமானம் அதிகரித்தது மட்டுமில்லாமல் மாதம் ஒரு நிலையான வருமானத்தையும் என்னால் பார்க்க முடிந்தது. ஒரு காலத்தில் எட்டாக்கனியாக இருந்த சேமிப்பு இப்போது சாத்தியமாகி இருப்பதை நினைக்கும் போது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது.

தையல் ஒரு கடல். இதில் நான் தற்போது அடிப்படை விஷயங்களைதான் கற்றிருக்கிறேன். இதனை தொடர்ந்து ஆரி வேலைப்பாடு, எம்பிராய்டரி குறித்த பயிற்சி எடுக்க இருக்கிறேன். மேலும், ஃபேஷன் டிசைனிங்கில் டிப்ளமோ படிக்கவும் திட்டமிட்டு இருக்கிறேன். இதன் மூலம் என்னுடைய தொழிலை விரிவுப்படுத்தும் நோக்கத்தில் நான் பயணிக்கிறேன். என்னைப் போல் பல இல்லத்தரசிகள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நான் சொல்வது ஒன்று தான் உங்களின் திறமையை வளர்த்துக் ெகாள்ளுங்கள். அதற்கான பயிற்சியினை மேற்கொள்ளுங்கள். தன்னம்பிக்கையை இழக்காதீர்கள். தவறு செய்துவிட்டோம் என்று முடங்கிவிடாமல் அதனை திருத்திக் கொண்டு பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் உயருங்கள். கண்டிப்பாக வெற்றி பெறலாம்’’ என்றார் தன்னம்பிக்கையுடன் சிந்து.

தொகுப்பு: நிஷா

Related Stories: