நன்றி குங்குமம் தோழி
தேவகி அம்மா
கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள முத்துக்குளத்தில் பிறந்தவர், தேவகி அம்மா. 1980ல் நடந்த ஒரு கார் விபத்தில் தேவகிக்குப் பலமாக அடிபட்டு, மூன்று வருடங்கள் படுக்கையில் இருக்க வேண்டிய நிலை. உடல்நிலை சரியான பிறகும் கூட, அவரால் நெல் வயலில் இறங்கி வேலை செய்ய முடியவில்லை.
அதனால் மரங்களை நட ஆரம்பித்தார். சில வருடங்களிலேயே 4.5 ஏக்கரில் 3000 மரங்களைக் கொண்ட ஓர் அழகான காட்டை உருவாக்கிவிட்டார். நாற்பது வருடங்களுக்கு மேலாக அந்தக் காட்டைப் பராமரித்து வருகிறார். அதில் அரிய வகை மரங்கள் இருப்பதோடு, பறவைகளின் வாழ்விடமாக இருக்கிறது தேவகி உருவாக்கிய காடு. அக்காட்டின் பெயர், டாபோவனம். காடு வளர்ப்புத் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியமைக்காக தேவகி அம்மாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது தேவகியின் வயது 92.
அர்மிடா பெர்னான்டஸ்
மருத்துவத்துறையில் சிறப்பான பங்களிப்பை கொடுத்ததற்காக அர்மிடாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற நியோனாட்டாலஜிஸ்டுகளில் முதன்மையானவர், அர்மிடா. அதாவது, பச்சிளங்குழந்தை சிறப்பு மருத்துவர் இவர். மும்பையில் உள்ள லோக்மான்யா திலக் மாநகராட்சி பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில், 1989ம் வருடம் ஆசியாவின் முதல் தாய்ப்பால் வங்கியை உருவாக்கியவர் அர்மிடாதான்.
ஒவ்வொரு வருடமும் இந்த வங்கி மூலம் 3000 முதல் 5000 குழந்தைகள் பலன் பெறுகின்றனர். ஒவ்வொரு வருடமும் இந்த வங்கியில் 800 முதல் 1200 லிட்டர் தாய்ப்பால் சேகரிக்கப்பட்டு, பிறந்த உடனே பாதிப்புக்குள்ளாகி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பச்சிளங்குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. மருத்துவப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட, மும்பையில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளிடம் ஆரோக்கியம் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அர்மிடாவின் வயது 83.
நெரிசலான நகரம்
கடந்த வருடத்தின் அதிக நெரிசலான 10 நகரங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதில் முதல் இடத்தைப் பிடித்து, உலகிலேயே அதிகமான வாகன நெரிசல் கொண்ட நகரம் என்ற அவப்பெயரைப் பெற்றிருக்கிறது, மெக்ஸிகோ. இரண்டாம் இடத்தை பெங்களூரு பிடித்திருப்பதுதான் இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம். பெங்களூரு நகரத்தில் சராசரி வாகன நெரிசலின் அளவு, 74.4 சதவீதம் என்கின்றனர். அதாவது, பெங்களூருவின் எந்தச் சாலையில், எப்போது சென்றாலும் போக்குவரத்து நெருக்கடி இருக்கும். ஒரு சில கிலோ மீட்டர் தூரம் செல்வதற்குக்கூட, பல நிமிடங்கள் பிடிக்கும். உலகிலேயே அதிகமான வாகன நெரிசல் கொண்ட நகரங்களின் பட்டியலில், 32ம் இடத்தைத்தான் சென்னை பிடித்திருக்கிறது என்பது ஆறுதல்.
தற்கொலையை தடுக்கும் நீலம்
உலகிலேயே அதிகமாக தற்கொலைகள் நடக்கும் நாடுகளில் ஒன்று, ஜப்பான். அங்கே தற்கொலை செய்துகொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்கின்றனர். அதனால் அந்த தற்கொலைகளை தடுக்க முடிவதில்லை. இந்நிலையில் டோக்கியோ பல்கலைக்கழகமும், ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து ரயில் நிலையங்களில் நடக்கும் தற்கொலைகளை தடுப்பதற்காக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.
இந்த ஆராய்ச்சியின் முடிவில் ரயில் நிலையங்களில் நீல எல்இடி விளக்குகளை பொருத்த முடிவு செய்தனர். இந்த நீல எல்இடி விளக்குகள் தற்கொலை விகிதத்தை 84 சதவீதம் குறைத்திருக்கிறது என்பதுதான் இதில் ஹைலைட். வானத்தையும், கடலையும் பார்ப்பதைப் போன்ற ஓர் உணர்வைத் தருகிறது, இந்த நீல விளக்கு.
இது மனக்கொந்தளிப்பை அமைதிப்படுத்துகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதனால் தற்கொலை செய்துகொள்வதற்குத் தயாராக இருப்பவர்கள் இந்த நீல வெளிச்சத்தில் இருக்கும் போது அவர்களது மனநிலை அமைதியாகி, தற்கொலை திட்டம் தடுக்கப்படுகிறது.
ரீல்ஸ் மோகம்
ஒவ்வொரு நாளும் சுமார் 450 கோடி ரீல்ஸ்கள் இன்ஸ்டாகிராமிலும், மற்ற தளங்களிலும் பகிரப்படுவதாக அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு. மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் இந்த ரீல்ஸ்கள் ஆயிரம் கோடிக்கும் அதிகமான பார்வைகளை அள்ளுகின்றன. ரீல்ஸை உருவாக்குபவர்கள் தினமும் 1 முதல் 3 ரீல்ஸ்களை தங்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில்
பதிவிடுகின்றனர்.
சிலர் தினமும் 30 முதல் 60 ரீல்ஸ்களை கூட பதிவிடுவதாகச் சொல்கின்றனர். இந்தியாவில் மட்டுமே தினமும் 4.7 கோடி ரீல்ஸ்கள் பதிவிடப்படுகின்றன. தினமும் அதிகளவில் ரீல்ஸை பதிவிடுபவர்களும் இந்தியர்களே. மட்டுமல்ல, இன்ஸ்டாகிராமை அதிகமாகப் பயன்படுத்துவதும் இந்தியர்கள்தான். ஆம்; இன்றைய தேதியில் சுமார் 42 கோடி இந்தியர்கள் இன்ஸ்டாகிராம் பயனாளிகளாக இருக்கின்றனர். இது பல நாடுகளின் மொத்த மக்கள் தொகையைவிட அதிகம்.
தொகுப்பு: த.சக்திவேல்
