கேரளாவில் இருந்து கோவைக்கு காரில் கடத்திய உயர் ரக போதைப்பொருள் சிக்கியது

*கேரள வாலிபர் கைது; கார் பறிமுதல்

கோவை : கேரளாவில் இருந்து கோவைக்கு காரில் உயர் ரக போதைப்பொருள் கடத்திய கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின் பேரில், தெற்கு துணை கமிஷனர் கார்த்திகேயனின் தனிப்படை போலீசார் மற்றும் குனியமுத்தூர் சரக உதவி கமிஷனர் மகேஷ்குமார் தலைமையில் நேற்று முன்தினம் காலை பாலக்காடு சாலை, சுகுணாபுரம் செக் போஸ்ட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கேரளா பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் காரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 90 கிராம் உயர் ரக போதை பொருளான மெத்தபெட்டமைன் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, போலீசார் மெத்தபெட்டமைனை கைப்பற்றி, காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் செம்பாரா பகுதியை சேர்ந்த ஹஸ்னல் ரகுமான் (33) என்பதும், இவர் போதைப்பொருளை கேரளாவில் இருந்து கடத்தி வந்து கோவையில் ஒரு கிராமிற்கு ரூ. 4 ஆயிரத்திற்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹஸ்னல் ரகுமானை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தொடர்ந்து போலீசார் கடத்தி வரப்பட்ட 90 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் அவரது காரை பறிமுதல் செய்தனர்.

2.5 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சின்னியம்பாளையம் பகுதியில் ரோந்து சென்ற போது அங்குள்ள காலி மைதானத்தில் வடமாநில வாலிபர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் இரண்டரை கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அந்த வாலிபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுபோத்குமார் (29) என்பதும், அவிநாசியில் தங்கி இருந்து கோவைக்கு கஞ்சாவை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: