நடத்தை சந்தேகத்தால் பயங்கரம் தலையில் கல்லை போட்டு மனைவியை கொன்ற 2வது கணவர்

*மூட்டை கட்டி சடலம் வீச்சு

திருமலை : நடத்தை சந்தேகம் காரணமாக மனைவியை கொலை செய்து சடலத்தை மூட்டை கட்டி வீசிய 2வது கணவரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், கொய்லகொண்டா கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ(35). இவரது மனைவி ஷோபாரணி(33). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, ஒரு மகன் உள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷோபாரணி, கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வந்தார். பின்னர் அதே கிராமத்தை சேர்ந்த நரசிம்மலு என்பவரை ஷோபாரணி மறுமணம் செய்துகொண்டாராம். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில், நரசிம்மலு அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் ஷோபாரணி தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன், தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாராம்.

நரசிம்மலு பலமுறை அழைத்தும் ஷோபாரணி குடும்பம் நடத்த வரவில்லையாம். இதனால் அவருக்கு வேறு சிலருடன் பழக்கம் இருப்பதாக நரசிம்மலுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி கடந்த 21ம் தேதி ஷோபாரணிக்கு போன் செய்து குழந்தைக்கு சைக்கிள் வாங்கி தருகிறேன். மகபூப் நகருக்கு வா என அழைத்துள்ளார். இதை நம்பி ஷோபாரணி தனது 3வயது மகளை அழைத்துக்கொண்டு சென்றார்.

அங்கு காத்திருந்த நரசிம்மலு, மனைவி மற்றும் மகளை பைக்கில் அழைத்துக்கொண்டு வீரண்ணாபேட்டையில் தான் தங்கியுள்ள வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நரசிம்மலு, ஷோபாரணி இருவரும் மது குடித்துள்ளனர்.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நரசிம்மலு, ஷோபாரணியை சரமாரி தாக்கியுள்ளார். மேலும் அங்கிருந்த கல்லை எடுத்து ஷோபாரணியின் தலையில் போட்டுள்ளார். இதில் அவர் தலை நசுங்கி படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, நரசிம்மலு அன்றைய இரவு உடலை சாக்குமூட்டையில் கட்டி தனது பைக்கின் முன்னால் வைத்துள்ளார். மேலும் மகளை அந்த மூட்டையின் மீது அமர வைத்துக்கொண்டு ரங்காரெட்டி பகுதிக்கு எடுத்து சென்று மூட்டையை புதரில் வீசியுள்ளார். பின்னர், மகளை, இங்கேயே இருக்கும்படி கூறிவிட்டு தப்பி சென்றுள்ளார். பின்னர், இரவு முழுவதும் குழந்தை அங்கேயே இருந்தது.

இதையடுத்து இரவு முழுவதும் தனியாக இருந்ததால், மறுநாள் காலை குழந்தை அழும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, புதரில் மூட்டை இருப்பதும், அதில் ரத்தக்கறைகள் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அப்பகுதியினர் ரங்காரெட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரங்காரெட்டி போலீசார், அங்கிருந்த மூட்டையை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் பெண்ணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், ஷோபாரணியை, அவரது 2வது கணவர் நரசிம்மலு அடித்து கொலை செய்தது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐதராபாத் லிங்கம்பள்ளியில் பதுங்கியிருந்த நரசிம்மலுவை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: