வர்த்தகம், தொழில்நுட்பத்தில் ஒப்பந்தங்கள் கையெழுத்து; இந்தியா – மலேசியா உறவில் புதிய சரித்திரம்: மோடி – அன்வர் இப்ராகிம் சந்திப்பில் திருப்பம்

புத்ராஜெயா: இந்தியா மற்றும் மலேசியா இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி மலேசியாவில் இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவின் மிக முக்கியமான வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக மலேசியா திகழ்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்று வரும் நிலையில், கடந்த காலங்களில் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப துறைகளில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

குறிப்பாகத் தமிழ் மொழி மீதான மலேசியர்களின் பற்று மற்றும் அந்நாட்டு கல்வி முறையில் தமிழுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் இரு நாடுகளையும் கலாசார ரீதியாக இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று மலேசியாவின் புத்ராஜெயாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் சிறப்பான ராணுவ மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளித்தார். இரு தலைவர்களும் உயர்மட்ட தூதுக்குழு அளவில் நடத்திய விரிவான பேச்சுவார்த்தையின் போது, தீவிரவாதம் ஒழிப்பு, உளவுத்துறை தகவல்களைப் பகிர்தல் மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஒத்துழைப்பை பலப்படுத்த உறுதி பூண்டனர். குறிப்பாகச் செமிகண்டக்டர்கள், தூய்மையான எரிசக்தி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் முதலீடுகளை அதிகரிக்கவும், மலேசியாவில் யூபிஐ பணப்பரிவர்த்தனை முறையை அமல்படுத்தவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இந்த பயணத்தின் போது சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. முன்னதாக கோலாலம்பூரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் சுமார் 18,000 இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘இந்தியா மற்றும் மலேசியா இடையிலான உறவு நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட லட்சியங்களில் வேரூன்றி உள்ளது’ என்று குறிப்பிட்டார். மேலும் மலேசிய பிரதமர் மோடியை தனது காரில் அழைத்துச் சென்று சிறப்பித்தது இரு நாட்டு தலைவர்களின் நெருக்கமான நட்பை வெளிப்படுத்தியது. இந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘இந்தியா – மலேசியா இடையிலான கூட்டாண்மைக்கு முன்னோடியில்லாத வேகத்தையும் ஆழத்தையும் கொண்டு வரும் தருணமாக அமைந்துள்ளது’ எனத் தெரிவித்தார்.

Related Stories: