மத்திய கிழக்கில் 5வது நாளாக போர் நீடிப்பு ஈரான் புதிய உச்ச தலைவராக கமேனி மகன் தேர்வு: பலி 1000-ஐ தாண்டியது; யுத்தம் மேலும் விரிவடைகிறது

துபாய்: மத்திய கிழக்கில் 5வது நாளாக நேற்று போர் நீடித்த நிலையில், ஈரானில் பலி எண்ணிக்கை 1000ஐ தாண்டி உள்ளது. இதற்கிடையே, ஈரானின் புதிய உச்ச தலைவராக மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போர் துருக்கி, இந்தியப் பெருங்கடல் என தொடர்ந்து விரிவடைவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்க-இஸ்ரேல் படைகள் கடந்த 28ம் தேதி ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் 5வது நாளாக நேற்றும் நீடித்தது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் காலையில் குண்டு சத்தங்களுடன் பொழுது விடிந்தது. விடிய விடிய நடந்த தாக்குதலில் சரிந்து கிடக்கும் கட்டிடங்கள் அந்நாட்டு அரசு டிவி சேனலில் ஒளிபரப்பப்பட்டது. டெஹ்ரான் வானில் போர் விமானங்கள் தொடர்ந்து பறந்தபடி இருந்தன. இஸ்ரேலின் எப்-35 விமானம் ஈரானின் யாக்-130 போர் விமானத்தை வானில் இடைமறித்து தாக்கி அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. மேலும், ஈரானின் ஆயுத கிடங்குகளையும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் தாக்கி அழித்த வீடியோவையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

பதிலுக்கு, ஈரான், பக்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதே போல, சவுதியின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிலையமான ராஸ் தனுரா மீது 2வது முறையாக நேற்றும் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என சவுதி அரேபியா கூறி உள்ளது. இதுவரை ஈரான் 500 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், 2000 டிரோன்களை ஏவியதாகவும் அவற்றில் பெரும்பாலானவற்றை வானில் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவம் கூறி உள்ளது.

இந்த 5 நாள் போரில் ஈரானில் பலியானோர் எண்ணிக்கை ஆயிரமை தாண்டி உள்ளது. மொத்தம் 1,045 பேர் பலியாகி இருப்பதாக ஈரானின் தியாகிகள் மற்றும் மூத்த குடிமக்கள் விவகார அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். குவைத்தில் ஏற்கனவே ஒருவர் பலியான நிலையில், நேற்று ஏவுகணையின் வெடித்த துண்டுகள் விழுந்து 11 வயது சிறுமி பலியாகி உள்ளார். பக்ரைனில் 3 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்சில் ஒருவர் பலியாகி உள்ளனர். பக்ரைனில் கடந்த 28ம் தேதி ஈரான் நடத்திய தாக்குதலில் 6 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் பெயர்கள் நேற்று வெளியிடப்பட்டன.

இதற்கிடையே நேற்று மாலை துருக்கி வான்வெளியில் பறந்த ஈரான் ஏவுகணையை நேட்டோ தனது வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி தாக்கி அழித்தது. இதுதொடர்பாக ஈரானுக்கு துருக்கியும், நேட்டோவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதவிர, இந்திய பெருங்கடலில் இலங்கை அருகே ஈரான் போர் கப்பலை அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் தாக்கி மூழ்கச் செய்ததாகவு அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே இப்போர் வளைகுடா பிராந்தியத்தை தாண்டி மத்திய தரைக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிக்கும் விரிவடைந்து வரும் பெரும் கவலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுதாக்குதலில் அயதுல்லா அலி கமேனி (86) கடந்த 28ம் தேதி கொல்லப்பட்டார். அவர் கடந்த 36 ஆண்டுகளாக உச்ச தலைவராக இருந்தவர். அவருக்கு பிறகு, அயதுல்லா அலிர்சா அராபி தலைமையிலான இடைக்கால தலைமை கவுன்சில் குழு ஈரான் நாட்டை வழிநடத்தி வருகிறது. இந்நிலையில், கமேனியின் மூத்த மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு 88 ஷியா மதகுருமார்கள் கொண்ட வல்லுநர்கள் குழு ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. மறைந்த கமேனியின் உடல் அவரது சொந்த ஊரான மஸ்ஸாத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை. கமேனி நல்லடக்கத்திற்கு பிறகு மொஜ்தபா உச்ச தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என கூறப்படுகிறது. ஈரானில் உச்ச தலைவரே உச்ச அதிகாரம் படைத்தவர். இவரது கட்டுப்பாட்டில் ராணுவமும், துணை ராணுவமான புரட்சிகர காவல் படையும் இருக்கும். அணு ஆயுதம் குறித்தும் யுத்தம் குறித்தும் முடிவெடுக்கும் முழு அதிகாரம் படைத்தவர் உச்ச தலைவர் மட்டுமே. எனவே இப்பதவியில் மொஜ்தபாவின் நியமனம் ஈரான் போரில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

* ரஷ்ய எண்ணெய் கப்பல் வெடித்து மூழ்கியது
லிபியா கடற்பகுதியில் மத்திய தரைக்கடலில் ரஷ்ய கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பல் நேற்று வெடித்து சிதறி கடலில் மூழ்கியது. அதில் 61 ஆயிரம் டன் என்எல்ஜி இயற்கை வாயு இருந்தது. அதிலிருந்த 30 ஊழியர்கள் மீட்கப்பட்டனர். இந்த கப்பல் வெடித்ததற்கான காரணம் தெரியவில்லை.

* அடுத்த தலைவரையும் கொல்வோம்: இஸ்ரேல்
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் நேற்று எக்ஸ் பதிவில், ‘‘இஸ்ரேலை அழிக்கவும், அமெரிக்காவையும் சுதந்திர உலகத்தையும் பிராந்திய நாடுகளையும் அச்சுறுத்தவும், ஈரானிய மக்களை அடக்கும் திட்டத்தை தொடரவும் ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு தலைவரும் அழிக்கப்படுவதற்கான இலக்காக இருப்பார்கள். அவர் பெயர் என்ன, அவர் மறைந்திருக்கும் இடம் எது என்பதெல்லாம் முக்கியமில்லை. அவர் யாராக இருந்தாலும் அழிக்கப்படுவார்’’ என கூறி உள்ளார்.

* யார் இந்த மொஜ்தபா?
மறைந்த அயதுல்லா அலி கமேனியின் 6 பிள்ளைகளில் மூத்த மகன் மொஜ்தபா கமேனி. கமேனியின் வீடு கடந்த 28ம் தேதி தகர்க்கப்பட்ட பிறகு மொஜ்தா வெளியில் தோன்றவில்லை. ஆனாலும் அவர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. பாதுகாப்பான ரகசிய இடத்தில் மொஜ்தபா பதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. மொஜ்தபா இதுவரை ஈரான் அரசில் எந்த முக்கிய பதவியையும் வகித்ததில்லை. ஆனால், தந்தை கமேனியின் பதவிக்காலத்தில் உச்ச தலைவரின் அலுவலகமான பெயிட் ரபாரியை சுமார் 20 ஆண்டுகள் வழிநடத்தியவர். ஈராக்கிற்கு எதிரான போரிலும் மொஜ்தபா பங்கேற்றுள்ளார்.

இதனால், கமேனி உருவாக்கிய துணை ராணுவமான ஈரான் புரட்சிகர காவல் படையிலும், மதகுருமார்களிடமும் மக்களிடமும் மொஜ்தபாவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. அயதுல்லா கமேனியை ஈரான் மக்கள் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த தியாகியாக பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி தலைமை இடத்தில் எந்த கொள்கை குழப்பமும் ஏற்படாமல் இருக்க புரட்சிகர காவல் படையும் மொஜ்தபாவையே விரும்புகிறது. அதனால் புரட்சிகர காவல் படையின் அழுத்தத்தால் தான் 88 ஷியா மதகுருமார்கள் மொஜ்தபாவை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

* ஒட்டுமொத்த பிராந்தியத்தை அழிப்போம்
ஈரானின் புரட்சிகர காவல்படை நேற்று விடுத்த அறிக்கையில், ‘‘அமெரிக்காவின் தாக்குதல் தொடர்ந்தால், வளைகுடா பிராந்தியத்தின் ஒட்டுமொத்த ராணுவ மற்றும் பொருளாதார கட்டமைப்புகளை முற்றிலும் அழிக்கப்படும். அதற்கு ஈரான் தயாராக இருக்கிறது’’ என எச்சரித்துள்ளது.

Related Stories: