ஈரான் நீதித்துறை தலைவர் எச்சரிக்கை அமெரிக்கா-இஸ்ரேலை ஆதரித்தால் மரண தண்டனை

துபாய்: அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆதரவாக எதையும் சொல்பவர்கள், செய்பவர்களுக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம் என ஈரான் நீதித்துறை தலைவர் கோலம் ஹுசைனி மொஹ்சேனி எஜேஹேய் மிரட்டல் விடுத்துள்ளார். ஈரானில் கடந்த ஜனவரி மாதம் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கைதான பலருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் பலருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா-இஸ்ரேலுடன் போர் நடக்கும் சூழலில் ஈரானின் நீதித்துறை தலைவர் கோலம் ஹுசேனி மொஹ்சேனி எஜேஹேய், அந்நாட்டு அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘‘எந்த வகையிலும் எதிரியுடன் ஒத்துழைப்பவர்கள் எதிரியாக கருதப்படுவார்கள் என்று நாங்கள் இப்போது அறிவித்துள்ளோம். எனவே அமெரிக்கா-இஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப எதையும் சொல்பவர்கள் அல்லது செய்பவர்கள் எதிரியின் பக்கம் நிற்பவர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் கட்டாயம் புரட்சிகர, இஸ்லாமிய கொள்கைகளின்படியும் போர் காலத்திற்கு ஏற்பவும் கையாளப்பட வேண்டும்’’ என்றார்.

Related Stories: