புதுடெல்லி: கத்தாரில் எல்என்ஜி உற்பத்தி நிறுத்தப்பட்டதால், இந்தியாவில் உரம் மற்றும் மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரானின் டிரோன் தாக்குதலில் கத்தார் தனது எல்என்ஜி (திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு) உற்பத்தியை கடந்த 2ம் தேதியிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. இதனால் கத்தாருடன் நீண்ட காலம் ஒப்பந்தம் செய்துள்ள பெட்ரோநெட் நிறுவனம் கத்தாரில் இருந்து எல்என்ஜியை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது, இந்தியாவின் எல்என்ஜி விநியோகத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, உரத் தொழிற்சாலை எரிசக்தி சார்ந்த தொழிற்சாலைகளுக்கும் நகர எரிவாயு விநியோக நிறுவனங்களும் எல்என்ஜி விநியோகம் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையங்கள், உரத் தொழிற்சாலைகள் எல்என்ஜியை அதிகம் பயன்படுத்துகின்றன. எனவே தற்போது இதன் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதால் உரம் மற்றும் மின்சாரம் உற்பத்தி செலவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்கள் மீதான விலை உயர்வுக்கும் வழிவகுக்கும். மேலும், வீடுகளுக்கு வழங்கப்படும் குழாய் வழி எரிவாயு (பிஎன்ஜி) மற்றும் வாகனங்களுக்கான சிஎன்ஜி விலைகளிலும் இதன் தாக்கம் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. தற்போது பெரும்பாலான ஆட்டோக்கள் மற்றும் கார்கள் சிஎன்ஜி எரிவாயு மூலம் இயங்கக் கூடியவையாக இருக்கின்றன. அவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா தனது எல்என்ஜி தேவையில் 50 சதவீதத்தை இறக்குமதியை நம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
