தாமரை ‘இலை’யில் தண்ணீராய் ஒட்டாத முக்கோண கூட்டணி! தூங்காநகரில் தூங்கி வழியுது தேர்தல் பணி: அதிமுக மாஜிக்களும் ஒற்றுமையின்றி தனித்தனி

அதிமுகவும், பாஜவும் கூட்டணியாக இணைந்தாலும் மதுரையை பொறுத்தவரை, தாமரை இலை தண்ணீராய் தான் கூட்டணியாக செயல்படுகின்றனர். சில மாதங்களுக்கு முன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு பிரசார பயணம் வந்தபோது, அவரது வாகனத்தில் ஏற முயன்ற பாஜ மாநில பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான ராமசீனிவாசனை ஏறவிடாமல் தடுத்து கீழே இறக்கிவிட்டனர்.

இது பாஜவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதிலிருந்தே மதுரையை பொறுத்தவரை பாஜ மற்றும் அதிமுகவினர் இடையே ‘தாமரை இலை தண்ணீர் போல’ ஒருங்கிணையாத கூட்டணியாகவே இருந்து வந்தனர். அதேநேரம், எடப்பாடியை கடுமையாக விமர்சித்து வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பாஜவின் நெருக்கடிக்கு பயந்து தே.ஜ. கூட்டணியில் இணைந்தார்.

மதுரையை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜ மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் ஒன்றாக இணைந்திருந்தாலும், இங்கு மூன்று கட்சிகளும் முக்கோண நிலையில் மூன்று திசையில் தனித்தனியாக நிற்கின்றனர். இதில் அதிமுக நிலை படுமோசம். இங்கு செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜன்செல்லப்பா ஆகியோர் மூன்று அணிகளாக உள்ளனர். பாஜ மீதான அதிருப்தி, எதிர்ப்பு விஷயத்தில் மட்டும் ஒரே மனநிலையில் உள்ளனர். இந்த பட்டியலில் அமமுகவினரும் இணைந்துள்ளனர்.

மூன்று கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியாக இருந்தாலும், மதுரையில் இவர்கள் மூவரும் இணையாமல் தனித்தனியாக மூன்று திசையில் அரசியல் செய்து வருகின்றனர். அதிமுகவினரை தவிர்த்து மற்ற இரு கட்சியினரும் தேர்தல் களத்தில் இதுவரையில் பார்வையாளர்களாகவே இருக்கின்றனர். இன்னும் இணைந்து செயல்படவில்லை. ‘‘மதுரையில் அமமுகவினருக்கு சீட் ஒதுக்கீடு இல்லை என்றாலும், தேர்தல் பணிகளை கருத்தில் கொண்டாவது எங்களை அணுக வேண்டும்.

அதேசமயம், அதிமுக மூத்த நிர்வாகிகள் யாரும் இதுவரை அமமுகவினரை கண்டு கொள்ளவில்லை. எங்கே பாஜவினர் தங்களது தொகுதிகளை கேட்டு விடுவார்களோ என்ற பயத்தில் அவர்களிடம் இருந்தும் சற்று தொலைவில் விலகியே நிற்கின்றனர் அதிமுகவினர்.

தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏற்கனவே உறுதியான கூட்டணியில் உள்ள மூன்று முக்கிய கட்சியினரும் மதுரையில் ஒன்றிணையாமல் தனித்தனியாய் நிற்பது அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தையும், சோர்வையுயும் ஏற்படுத்துகிறது’’ என அதிமுக மதுரை மாவட்ட மூத்த நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

Related Stories: