சென்னை: நீண்ட காலமாக சஸ்பெண்ட்டில் உள்ள போலீஸ்காரர்களின் சஸ்பெண்டை ரத்து செய்ய டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். தமிழக காவல்துறையில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீண்ட காலமாக பணியிடை நீக்கத்தில் வைக்கப்பட்டுள்ள காவலர்களின் வழக்குகளை மறுஆய்வு செய்து, அவர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது குறித்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் ஜி.வெங்கட்ராமன் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மண்டல காவல்துறை தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
காவல்துறை தலைமையகம் நடத்திய ஆய்வில், கடந்த 31.12.2025 நிலவரப்படி தமிழகம் முழுவதும் 439 காவலர்கள் பணியிடை நீக்கத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில்,லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் ,கிரிமினல் வழக்குகள், துறைரீதியான விசாரணைகள் மற்றும் பிஎஸ்ஓ 151 பிரிவின் கீழ் உள்ள வழக்குகள்ஆகியவற்றின் காரணமாக இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், இவர்களில் 202 காவலர்கள் ஓராண்டிற்கும் மேலாக பணியிடை நீக்கத்திலேயே தொடர்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து டிஜிபி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழக அரசு ஏற்கனவே பிறப்பித்துள்ள அரசாணைகளை சுட்டிக்காட்டியுள்ளார். ‘ஒரு அரசு ஊழியரை நீண்ட காலம் பணியிடை நீக்கத்தில் வைப்பது, அவர் எந்த வேலையும் செய்யாத நிலையில் அவருக்கு அரசு பிழைப்பூதியம் வழங்குவதற்கு சமம். இது அரசுக்கு தேவையற்ற நிதி இழப்பை ஏற்படுத்துகிறது.
எனவே, பணியிடை நீக்கம் செய்யும் அதிகாரத்தை மிகவும் கவனத்துடனும், பொதுநலன் கருதி அவசியமானால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என்று அரசு அறிவுறுத்தியுள்ளதை அவர் நினைவுபடுத்தியுள்ளார். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சஸ்பெண்ட் உத்தரவுகளை மறுஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டுதலில், நீண்ட காலமாக சஸ்பெண்டில் இருப்பவர்களின் வழக்குகளை முன்னுரிமை கொடுத்து ஆய்வு செய்ய வேண்டும்.
பல நேரங்களில் நீண்ட கால சஸ்பெண்ட் உத்தரவுகளை நீதிமன்றங்கள் ரத்து செய்வதால், இதை அதிகாரிகளே முன்கூட்டியே பரிசீலிக்க வேண்டும். மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் அல்லது பொதுநலனை பாதிக்கும் வகையிலான வழக்குகள் இல்லாத பட்சத்தில், நியாயமற்ற முறையில் நீண்ட காலம் சஸ்பெண்டில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
லஞ்ச ஒழிப்பு அல்லது கிரிமினல் வழக்குகளில் சட்ட சிக்கல்கள் காரணமாக விசாரணை முடிவடைய காலதாமதம் ஆகும் சூழல் இருந்தால், லஞ்ச ஒழிப்புத்துறையுடன் கலந்தாலோசித்து சஸ்பெண்டை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கலாம். சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்படும் காவலர்களுக்கு சில கட்டுப்பாடுகளையும் டிஜிபி விதித்துள்ளார். மீண்டும் பணியில் சேரும் காவலர்களை, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக விடுவிக்கப்படும் வரை முக்கியத்துவமற்ற பதவிகளில் மட்டுமே பணியமர்த்த வேண்டும்.
கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது, துறைரீதியான நடவடிக்கைகளையும் ஒரே நேரத்தில் தொடங்க வேண்டும். இந்த உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, அனைத்து பிரிவு அதிகாரிகளும் வருகிற 13.02.2026-க்குள் காவல்துறை தலைமையகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று டிஜிபி ஜி.வெங்கட்ராமன் கறாராக உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம், நீண்ட காலமாக வேலை மற்றும் முழு சம்பளம் இன்றி தவித்து வந்த நூற்றுக்கணக்கான காவலர்கள் விரைவில் பணிக்கு திரும்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
