மனநோயாளி எனக்கூறி விவாகரத்து பெற்ற கணவர்; மனைவிக்கு ஜீவனாம்சம் தர மறுத்ததை ஏற்க முடியாது: ஆடிட்டர் வழக்கில் டெல்லி ஐகோர்ட் அதிரடி

 

புதுடெல்லி: மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியை விவாகரத்து செய்த பின் அவர் படித்தவர் என்பதால் ஜீவனாம்சம் தர மறுக்கக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த பட்டய கணக்காளர் (ஆடிட்டர்) ஒருவருக்கும், உயர்கல்வி படித்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தனது மனைவிக்கு ஸ்கிசோஃப்ரினியா எனப்படும் மனநல பாதிப்பு உள்ளதாகக் கூறி அந்தப் பெண்ணின் கணவர் விவாகரத்து பெற்றிருந்தார். விவாகரத்துக்குப் பிறகு அந்தப் பெண் தனக்கு ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தை நாடினார்.

ஆனால் அந்தப் பெண் அதிகம் படித்தவர் என்றும், அவரால் வேலைக்குச் சென்று சம்பாதித்துக் கொள்ள முடியும் என்றும், எனவே அவருக்குத் தனியாக ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என்றும் அந்தப் பெண்ணின் கணவர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்வரணா காந்த சர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘திருமண வாழ்க்கையைத் தொடர முடியாத அளவுக்கு மனைவிக்கு மனநல பாதிப்பு இருப்பதாகக் கூறி விவாகரத்து பெற்றுவிட்டு, தற்போது அவர் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் அளவுக்கு மனத் தகுதியுடன் இருக்கிறார் என்று கூறுவதை ஏற்க முடியாது.

மேலும் படித்தவர் என்பதாலேயே அவர் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக இருக்கிறார் என்று அர்த்தம் இல்லை. வேலை செய்யும் தகுதி இருப்பதும், வேலை கிடைப்பதும் வெவ்வேறானது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்குவது என்பது சமூக நீதியின் ஒரு பகுதியாகும். ஆதரவற்ற நிலையைத் தடுப்பதே இதன் நோக்கம். கணவர் ஒரு ஆடிட்டராக பணிபுரிந்து கணிசமான வருமானம் ஈட்டுவதைக் கருத்தில் கொண்டு, அந்தப் பெண்ணுக்கான மாதாந்திர ஜீவனாம்20,000 ரூபாய் வழங்க வேண்டும்’ என்று தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: