எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு: மோடியின் உரை குறித்து கார்கே கடும் விமர்சனம்

 

புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் கூட்டத்தொடர் வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மோடியின் உரை குறித்து கார்கே கடும் விமர்சனம் வைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. வழக்கமான பிரதமரின் பதிலுரை இல்லாமலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முறையற்றது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

மேலும், முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் புத்தகத்தை மேற்கோள் காட்டி பேச அனுமதி மறுக்கப்பட்டதால், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுரிமை பறிக்கப்படுவதாக அவையில் கடந்த சில நாட்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில், இன்று ஐந்தாம் நாள் கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. காலை 11 மணிக்கு அவை கூடியதும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை ‘சதி ஒப்பந்தம்’ என வர்ணிக்கும் பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கோஷங்களை எழுப்பினர்.

அவையின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்தும், அமளி நீடித்ததால் அவை நடவடிக்கைகளை அவர் தற்காலிகமாக நிறுத்தினார். அவை மீண்டும் கூடிய போது, எதிர்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் வரும் 9ம் தேதிக்கு அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘பிரதமரின் உரைக்கு எதிர்வினை ஆற்ற வேண்டிய அவசியமே இல்லை.

சுமார் 97 நிமிடங்கள் பேசிய பிரதமர், உருப்படியான திட்டங்கள் குறித்து எதுவும் கூறாமல் கடந்த 75 ஆண்டுகால வரலாற்றைப் பற்றியே பேசினார். எங்களிடம் முன்னாள் ராணுவ தளபதியின் புத்தகம் இருக்கும்போது, ஒன்றிய அரசிடம் அந்த புத்தகம் எப்படி இல்லாமல் போனது? ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அவர்கள் திணறுகின்றனர்’ என்றார்.

மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாஜக அவமதிப்பதாக குற்றம் சாட்டிய அவர், ‘நாங்கள் சீக்கிய சமூகத்தை மதிக்கிறோம், அதனால்தான் சிறந்த பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்கை இரண்டு முறை பிரதமராக்கினோம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரசை திட்டுவதையே பாஜக வேலையாக வைத்துள்ளது. தலித் மக்கள் உட்பட யாரையும் மதிக்காத பாஜக, தனது தோல்விகளை மறைக்க பொய் புகார்களை கூறி வருகிறது’ என்றார்.

Related Stories: