நடிகர் கார் மோதி 2 பேர் படுகாயம்: விசாரணைக்கு ஆஜரானவர் கைது

 

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நேற்று இரவு பிரபல மலையாள நடிகர் மணியன்பிள்ளை ராஜுவின் கார் மோதி பைக்கில் சென்ற இரண்டு வாலிபர்கள் படுகாயமடைந்தனர். திருவனந்தபுரம் வழுதக்காட்டில் பிரபல கிளப் ஒன்று உள்ளது. நேற்று இரவு சுமார் 10 மணியளவில் கிளப்பில் இருந்து வெளியே வந்த சொகுசு கார் அந்த வழியாக சென்றுகொண்டிருந்த பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பைக்கில் இருந்த 2 வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் வேகமாக சென்று விட்டது.

இதுகுறித்து அறிந்ததும் திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த வாலிபர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் கண்டேஸ்வரம் பகுதியை சேர்ந்த நிவேதித் கிருஷ்ணா, சூரஜ் என்பது தெரியவந்தது. அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய கார் பிரபல மலையாள நடிகர் மணியன் பிள்ளை ராஜுவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவரை தொடர்புகொள்ள போலீசார் முயற்சித்தனர். வீட்டுக்கு சென்று விசாரித்தபோது அவர் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. அவரது போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. முதலில் நடிகரின் டிரைவர் காரை ஓட்டி இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் காரை ஓட்டியது மணியன்பிள்ளை ராஜுதான் என்பது தெரியவந்து உள்ளது. விபத்தை ஏற்படுத்திய காருடன் இன்று மியூசியம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு கூறி அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை சுமார் 9 மணியளவில் நடிகர் மணியன்பிள்ளை ராஜு மியூசியம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரை கைது செய்த போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நடிகர் மணியன்பிள்ளை ராஜு மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

நான் மது அருந்தவில்லை
போலீஸ் நிலையத்தில் இன்று காலை ஆஜராக வந்த நடிகர் மணியன்பிள்ளை ராஜு கூறியது: நான் நேற்று இரவு வழுதக்காட்டில் உள்ள கிளப்பில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு காரில் வெளியே வந்தேன். அப்போது வேகமாக வந்த ஒரு பைக் என்னுடைய காரின் பின்புறம் மோதியது. இதனால் பயந்த நான் அந்த இடத்தில் இருந்து சென்று விட்டேன். நான் ஒரு புற்றுநோயாளி. எனக்கு சிக்குன்குனியாவும் பாதித்துள்ளது. இதனால் நான் மது அருந்துவது கிடையாது என்றார்.

Related Stories: