கான்ட்ராக்டர்களிடம் லஞ்சம் வாங்கி ரூ.பலகோடி சொத்து குவித்த இன்ஜினியர் அதிரடி கைது: தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

 

திருமலை: பஞ்சாயத்துராஜ் துறையில் பணியாற்றியபோது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை குவித்த இன்ஜினியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சீனிவாசராவ். இவர் பஞ்சாயத்துராஜ் துறையில் மேற்பார்வை இன்ஜினியராக பணியாற்றி கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இந்நிலையில் சீனிவாசராவ், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று விசாகப்பட்டினம், விஜயநகரம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள அவரது வீடுகளில் சோதனை நடத்தினர்.

இதில் 5 வீடுகள், 19 ஏக்கர் விவசாய நிலம், ரூ.62 லட்சம் ரொக்கம், இரண்டரை கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி, கார்கள் மற்றும் பைக்குகள் ஆகியவை சட்டவிரோதமாக சம்பாதித்தது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது, சீனிவாசராவ், தனது துறையில் திட்டப்பிரிவு இன்ஜினியராக இருந்தபோது, சாலை கட்டுமான பணி மேற்கொண்ட கான்ட்ராக்டர்களிடம் இருந்து அதிகளவு பணத்தை சதவீத அடிப்படையில் லஞ்சமாக பெற்றது தெரியவந்தது.

மேலும் மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் தீவிரவாத செயல்களின் ஆதிக்கத்தை குறைக்க, அனைத்து பகுதிகளிலும் மத்திய, மாநில அரசுகள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சாலை வசதி உள்ளிட்ட திட்டங்களை அனுமதித்தது. அந்த நிதியை செலவழிப்பதிலும் சீனிவாசராவ் தரப்பில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளது. சீனிவாசராவ் 2021ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் உள்ள ஜில்லா பரிஷத் அலுவலகத்தில் திட்டப்பிரிவில் சேர்ந்தார். அங்கு சாலை கட்டுமானத்திற்கான திட்டங்களை தயாரித்து அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும் பணி நடைபெறும்.

இங்கு எம்.புக் பதிவு முதல் பில் ஒப்புதல் வரை பணி மேற்கொள்ளப்படும். இங்கு வரும் கான்ட்ராக்டர்களிடம் பெரும் தொகை லஞ்சமாக பெற்று வந்துள்ளனர். அதில் சீனிவாசராவ், மிகப்பெரிய தொகையை தனக்கான பங்காக பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சீனிவாசராவை போலீசார் கைது கைது செய்து விசாகப்பட்டினம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: