யு-19 உலகக் கோப்பை இறுதியில் இந்தியா; அதிரடியில் அடங்கிய ஆப்கன்: வைபவ், ஆரோன் ரன் வேட்டை

ஹராரே: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இளம் இந்தியா அணி அட்டகாசமாக ஆடி 7 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  19 வயதுக்கு உட்பட்ட ஆடவருக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த அரை இறுதிப் போட்டியில் இளம் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் 2வது அரையிறுதிப் போட்டி ஹராரே நகரில் நேற்று நடந்தது.

இதில் இளம் இந்தியா – இளம் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கன் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதையடுத்து துவக்க வீரர்களாக களமிறங்கிய அந்த அணியின் ஒஸ்மான் சதாத் (39 ரன்), காலித் அஹமத்ஸாய் (31 ரன்), முதல் விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்தனர். பின்னர் இணை சேர்ந்த பைசல் ஷினோஸதா, உசைருல்லா நியாஸாய் பொறுப்புடனும் நேர்த்தியாகவும் ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவர்களின் அதிரடியால் ரன்கள் வேகமாக குவிந்தன. இந்த இணை 148 ரன்கள் விளாசிய நிலையில், 3வது விக்கெட்டாக, பைசல், 110 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த அஸிஸுல்லா மியாகில் 12 ரன்னில் வீழ்ந்தார். 50 ஓவர் முடிவில் ஆப்கன், 4 விக்கெட் இழந்து 310 ரன் குவித்தது. உசைருல்லா 86 பந்துகளில் 101 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பின்னர், 311 ரன் இலக்குடன் இளம் இந்தியா களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, 33 பந்துகளை சந்தித்து 4 சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 68 ரன்களை வேட்டையாடி அவுட்டானார். அவர் அமைத்து தந்த அடித்தளத்தை சிறப்பாக பயன்படுத்திய மற்ற வீரர்கள் அமர்க்களமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

அதனால், 41.1 ஓவரில் இளம் இந்தியா 3 விக்கெட் மட்டுமே இழந்து 311 ரன்கள் குவித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் மற்றொரு துவக்க வீரர் ஆரோன் ஜார்ஜ், 104 பந்துகளை எதிர்கொண்டு 115 ரன்கள் விளாசினார். கேப்டன் ஆயுஷ் மாத்ரே 62 ரன் எடுத்தார். விஹான் மல்கோத்ரா 38, வேதாந்த் திரிவேதி 5 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியை அடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா, நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் இளம் இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது.

Related Stories: