கலசபாக்கத்தில் பாரம்பரிய விதை மையத்தில் ஆய்வு இயற்கை விவசாயம் செய்ய கிடங்குகள் அமைத்து தர நடவடிக்கை

*கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவு

கலசபாக்கம் : கலசபாக்கத்தில் பாரம்பரிய விதை மையத்தில் இயற்கை விவசாயம் செய்ய கடன் உதவிகள், கிடங்குகள் அமைத்த தர வேண்டும் என்று கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.

கலசபாக்கம் ஊராட்சிக்குட்பட்ட விண்ணுவாம்பட்டு பகுதியில் பாரம்பரிய விதை மையம் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கலெக்டர் தர்ப்பகராஜ் பாரம்பரிய விதை மையத்தில் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது விவசாயிகள் இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ள விவசாய பொருட்கள் குறித்து கேட்டறிந்தார். இயற்கை விவசாய பொருட்களின் பருவ காலம் உற்பத்தி செய்யும் முறை விதைகளை பராமரித்து பாதுகாத்தல், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்தல் குறித்து விவசாயிகள் கலெக்டரிடம் தெரிவித்தனர்.

மேலும் இயற்கை முறையில் விவசாயம் செய்து உற்பத்தி செய்யும் விவசாய விலைப் பொருட்களை விற்பனை செய்ய சந்தை அமைத்து தர வேண்டும். அரசு விழாக்கள் நடக்கும்போது இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை அரங்குகளில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி வழங்குவதோடு இயற்கை விவசாயம் செய்வதற்கான கடன் உதவிகள் மற்றும் கிடங்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக விவசாயிகள் இருக்கும் பகுதிகளில் இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரசு அலுவலக வளாகங்களில் இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார். ஆய்வின்போது பிடிஓக்கள் பாலமுருகன். ராஜேஸ்வரி தாசில்தார் தேன்மொழி மற்றும் இயற்கை விவசாயத்தின் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related Stories: