மது பார்ட்டிக்கு அனுமதி மறுத்ததால் நள்ளிரவில் தாபா ஓட்டலை சூறையாடி எரித்த கும்பல் ஓமலூர் அருகே பரபரப்பு

ஓமலூர், பிப்.2: ஓமலூர் அருகே திமிரிக்கோட்டை பகுதியில், தாபா ஓட்டல் செயல்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பால், கடந்த ஓராண்டாக மூடிக் கிடந்த ஓட்டல், தற்போது தான் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, அங்கு பாலிகடை பகுதியைச் சேர்ந்த 5க்கும் மேற்பட்ட நபர்கள் சென்றுள்ளனர். ஓட்டலை திறந்து உணவு வழங்குமாறு மிரட்டியுள்ளனர். உடனே, அங்கிருந்த ஊழியரும் உணவு தயார் செய்து கொடுத்துள்ளார். அப்போது, கையோடு வங்கி வந்திருந்த மதுவை அவர்கள் குடிக்க தொடங்கினர். அதற்கு ஊழியர் எதிர்ப்பு தெரிவித்து, “இங்கே மது குடிக்க அனுமதி இல்லை. அனைவரும் எழுந்து செல்லுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த கும்பல், தாபா ஊழியரை சரமாரி தாக்கி விட்டு, அங்கிருந்த குடிலுக்கு தீ வைத்தனர். அப்போது, எங்களுக்கு மது குடிக்க அனுமதி இல்லை என்றால், “இங்கே ஓட்டல் கடையே இருக்க கூடாது” என்று கூறியதுடன், ஓட்டலை மட்டுமல்ல உங்களையும் கொளுத்தி விடுவோம் என்று கூறி மிரட்டி சென்றுள்ளனர். குடில் எரிவதை பார்த்த அக்கம்- பக்கத்தினர் ஓடி வந்து தீயை அனைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: