ரயில்வே,மின் துறை தனியார் மயம் மத்திய பட்ஜெட்டிற்கு மக்கள் கடும் எதிர்ப்பு

தொண்டி, பிப்.2:  மத்திய பட்ஜெட்டை பல்வேறு தரப்பினரும் குறை கூறியுள்ளனர். மின் துறை, ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடப்பு  ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று  தாக்கல் செய்தார். அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்பாகவே இந்த  பட்ஜெட் உள்ளதாக பெரும்பாலானோர் தெரிவித்தனர். ஜிஎஸ்டி, ரூபாய் நோட்டு  செல்லாததாக அறிவிக்கப்பட்ட பிறகு நலிவடைந்துள்ள சிறுதொழில்,  இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான திட்டங்கள்,  இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள் குறித்து எவ்வித  அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.

வழக்கம்போல் விவசாயத்திற்கு  முக்கியத்துவம் அளிக்கப்பட்டது போல் அறிவிப்புகள் இருந்தாலும், ஏற்கனவே  இந்த அரசின் பட்ஜெட்டிலும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்  என்ற அறிவிப்பு வழக்கம்போல் ஏமாற்றமே அளித்தது என்பதால் விவசாயிகள் இது  வெற்று அறிவிப்பு என்றே பார்க்கின்றனர். இதுபோல் எல்ஐசி நிறுவனத்தின்  பங்குகளை தனியாருக்கு விற்பது, காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு  அதிகரிப்பு, ரயில்வேயில் தனியார் பங்களிப்பை அதிகப்படுத்துவது, மின்துறையை  தனியார் மயமாக்குவது உள்ளிட்டவற்றையும் அனைத்து தரப்பினரும் கடுமையாக  எதிர்க்கின்றனர். இதுபோல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி  உச்சவரம்பில் எவ்வித மாற்றமும் இல்லாததும் பலருக்கு ஏமாற்றத்தை  அளித்துள்ளது. இன்று உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை அனைத்து  தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்க மாவட்ட துணை செயலாளர் தமிழரசன் கூறியதாவது:கொரோனா தொற்றால் அரசு  ஊழியரின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவை  கட்டுப்படுத்தியதில் அரசு ஊழியர்களின் பங்கு மகத்தானது. அவர்களுக்கு இந்த  அரசு அளித்த பரிசு ஒன்றரை ஆண்டுகளுக்கான அகவிலைப்படியை ரத்து செய்ததுதான்.  அகவிலைப்படியை வழங்கும் அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை. தனி நபர் வருமான வரி  உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது என்றார்.

Related Stories: