சிபிஎஸ்இ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: சிபிஎஸ்இ நடத்தும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியருக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை பள்ளிகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நடத்தப்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கான ஆண்டு பொதுத்தேர்வு பிப்ரவரி 17ம் தேதி தொடங்க இருக்கிறது.

பத்தாம் வகுப்பு தேர்வு 2026 பிப்ரவரி 17ம் தேதி தொடங்கி மார்ச் 11ம் தேதி வரை நடக்கிறது. 12ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 17ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை நடக்கும். இந்த தேர்வுகளில் பங்கேற்க பள்ளிகள் மூலம் விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியருக்கான ஹால்டிக்கெட்டுகளை சிபிஎஸ்இ, அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியிட்டுள்ளது. மேலும், பள்ளிகள் மூலம் விண்ணப்பித்தவர்கள் அந்தந்த பள்ளிகளில் இருந்து ஹால்டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

பள்ளிகள் மூலம் பெறப்படும் ஹால்டிக்கெட்டுகளில் அந்தந்த பள்ளியின் முதல்வர்கள் கையொப்பம் இருக்க வேண்டும். அதனால் அந்தந்த பள்ளிகளில் சிபிஎஸ்இ இணைய தளத்தில் இருந்து மாணவ, மாணவியரின் ஹால்டிக்கெட்டுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு முதல்வர்கள் கையொப்பமிட்டு வழங்கவும் பள்ளிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

பள்ளிகள் தவிர தனித் தேர்வர்களாக விண்ணப்பித்துள்ளவர்கள் சிபிஎஸ்இ இணைய தளத்தில் இருந்து தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு தேர்வு நாளில் எடுத்து செல்ல வேண்டும். பதிவிறக்கம் செய்யும் போது மாணவர்கள் தங்களின் விண்ணப்ப எண் அல்லது முந்தைய தேர்வு எண்ணை பயன்படுத்தி ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் ஆண்டு பொதுத் தேர்வுகள் இந்த ஆண்டு முதல் இரண்டு கட்டமாக நடத்தும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்வு பிப்ரவரி-மார்ச் எனவும், இரண்டாம்கட்ட தேர்வு (விருப்ப முறை) மே-ஜூன் மாதங்களிலும் நடக்கும். இந்த இரண்டு தேர்வுகளில் மாணவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்களோ அதுவே இறுதியான தேர்வு முடிவாக எடுத்துக் கொள்ளவும் சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

Related Stories: