ஒன்றிய அரசு பட்ஜெட்டில் விலைவாசியை கட்டுப்படுத்தும் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: பிரேமலதா பேட்டி

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தென் மாவட்டங்களில் தனது பிரசார கூட்டங்களை முடித்துவிட்டு, நேற்று இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்தார். அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: எங்களோடு நட்பாக இருப்பதால், எல்லா கட்சியைச் சேர்ந்தவர்களும், எங்களோடு பேசுவார்கள்.

அதற்காக அவர்களிடம் பேசி விட்டோம், கூட்டணி இறுதியாகிவிட்டது என்று கூற முடியாது. மற்ற கட்சிகள் பேசினால், கூட்டணி பேச்சு வார்த்தை. தேமுதிக பேசினால் அதற்கு வேறு ஒரு பெயர் கூறுகிறீர்கள். இது கண்டனத்துக்குரியது.  எங்கள் கட்சிக்கு உரிய மரியாதை எங்கு கிடைக்கிறதோ அங்குதான், எங்கள் கட்சி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ஆகியோரிடம் கலந்து பேசிவிட்டு, கூட்டணியை அறிவிப்போம்.

ஒன்றிய பட்ஜெட்டில் மற்ற மாநிலங்களுக்கு நதிகள் இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்கு அதேபோன்று எந்த அறிவிப்பும் இல்லாதது ஏன்? தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு மேலும் பல அறிவிப்புகள் வந்திருக்க வேண்டும். அதேபோல் சிறு குறு தொழிலுக்கு வரிகள் குறைக்கப்படவில்லை.

வரிகள் குறைத்தால் தான், அந்த தொழில்கள் நல்ல முறையில் வளர்ச்சி அடையும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லாதது, எல்லாருக்கும் ஏமாற்றம். நடுத்தரம் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு எந்த அறிவிப்புகளும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: