எடப்பாடிக்கு எதிராக எம்ஜிஆர் ரசிகர்கள்!

அதிமுக வரலாற்றில் திண்டுக்கல்லுக்கு ஒரு தனி மரியாதை உண்டு. காரணம். 1972ல் அதிமுக துவங்கப்பட்டதும், முதல் அரசியல் பொதுக்கூட்டம் திண்டுக்கல் ஆர்.வி. நகரில்தான் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்தான் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை அறிமுகமானது. 1973ல் திண்டுக்கல் எம்பி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அக்கட்சியின் முதல் எம்பி ஆனார் மாயத்தேவர்.

பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.வரதராஜன் வெற்றி பெற்றார். அன்றைய அதிமுக கூட்டணி மதச்சார்பற்ற மற்றும் சமூகநீதியை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. தற்போது வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் அக்கட்சியின் தீவிர விசுவாசிகள் மற்றும் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தினர் கடும் அதிருப்தியை அடைந்துள்ளனர்.

மதவாத கட்சியுடன் எப்போதுமே கூட்டணி இல்லை என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொதுக்கூட்டங்களில் பகிரங்கமாக பேசியுள்ளார். அந்த வகையில் கட்சித்தலைவர்கள் பின்பற்றிய மதசார்பற்ற கொள்கையை காவு வாங்கி விட்டு, மதவாத அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தினர் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளதாகவும், வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு நிச்சயம் பாடம் புகட்ட தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

Related Stories: