மாமியார் வீட்டுக்கு வந்த வாலிபரை திருடன் என நினைத்து கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்

பண்ருட்டி, பிப். 4: மாமியார் வீட்டுக்கு வந்த வாலிபரை திருடன் என நினைத்து கம்பத்தில் வைத்து தாக்கிய 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் பகுதியை சேர்ந்தவர் பூவரசன். இவர் நேற்று முன்தினம் மாலை பண்ருட்டி அருகே உள்ள ஓறையூர் கிராமத்திலுள்ள தனது மாமியார் வீட்டிற்கு மனைவி மற்றும் குழந்தை உடன் வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தனசேகர் (26) என்பவரது இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது. காணாமல் போன இரு சக்கர வாகனத்தை பூவரசன், அவரது நண்பர்கள் மூலம் திருடி விட்டார் என தனசேகர் மற்றும் சேகர், சபரிநாதன், பழனிவேல், ராஜதுரை, பாலாஜி, உடோல், அங்காளம்மா, மோனிகா ஆகியோர் சேர்ந்து பூவரசனின் மாமனார் அமிர்தலிங்கம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அசிங்கமாக திட்டி பூவரசனை வெளியே இழுத்து மின் கம்பத்தில் கட்டி வைத்து இரும்பு ராடால் அடித்தனர். பூவரசன் போட்டிருந்த பெல்ட்டை கழற்றி அடித்து நெஞ்சில் உதைத்தனர். பூவரசன் குழந்தையை கீழே தள்ளிவிட்டனர். பூவரசன் மனைவி மஞ்சுளாவின் முடியை பிடித்து இழுத்து அடித்துள்ளனர். இதில் காயமடைந்த பூவரசன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இது குறித்து புதுப்பேட்டை போலீசில் பூவரசன் மனைவி மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் தனசேகர் உள்பட 9 பேர் மீது புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் அம்பிகா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: