தமிழக கவர்னர் மரபுகளை மாற்றுவதாக குற்றம்சாட்டி முதல்வர் படத்தை வைத்து பட்டம் வாங்கிய மாணவன்: அண்ணாமலை பல்கலை.யில் பரபரப்பு

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அங்குள்ள சாஸ்திரி அரங்கில் நேற்று நடந்தது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களையும், பல்வேறு அறக்கட்டளை பரிசுகளையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து 1014 மாணவ- மாணவியர்களுக்கு நேரடியாக பட்டங்களையும், பல்வேறு பாடங்களில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற 45 மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு அறக்கட்டளை சார்பில் தங்கப் பதக்கம் உள்ளிட்ட ரொக்கப் பரிசுகளையும் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார். அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை ஆராய்ச்சி மாணவர் விக்கிரவாண்டியை சேர்ந்த புஷ்பராஜ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடமிருந்து பட்டம் பெற்றார்.

இதுகுறித்து மாணவர் புஷ்பராஜ் கூறுகையில், ‘‘நீதிமன்ற உத்தரவுப்படி முதலமைச்சர்தான் பல்கலைக்கழக வேந்தராக வருவார் என எதிர்பார்த்தேன். ஆனால் பட்டமளிப்பு விழா பத்திரிகையில் ஆளுநரின் பெயர் இருந்தது.
பட்டமளிப்பு விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாட வேண்டும் பின்புதான் தேசிய கீதம் பாட வேண்டும். ஆனால் நம்முடைய தமிழ் மரபையே ஆளுநர் மாற்றிவிட்டார். விழா துவங்கும்போதும், விழா முடிந்தவுடனும் இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில்தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ராஜேந்திரன் சுடப்பட்டார். அப்படி ஒரு தமிழ் வளர்த்த இந்த பல்கலைக்கழகத்தில் தேசிய கீதம்தான் முதலில் பாடப்பட்டுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாக பாடப்பட்டுள்ளது. தமிழினுடைய கலாச்சாரங்கள் அனைத்தையுமே ஆளுநர் மாற்றி உள்ளார். அதனால் முதல்வர் படத்தை வைத்து பட்டம் வாங்கினேன். தமிழக முதல்வர்தான் தமிழ்நாட்டின் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டுமென்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை கவர்னர் புறக்கணித்து விட்டார். ஆகையால் நான் அவரிடம் பட்டம் வாங்கும்போது தமிழக முதல்வர் படத்தை வைத்து அவரது கையால் பட்டம் வாங்கியதாக நினைத்துக் கொண்டேன். முதலமைச்சரின் திட்டங்கள் நன்றாக இருக்கிறது. அவர் உயர்த்திய ஸ்காலர்ஷிப் வாங்கிதான் நான் படித்தேன் என்றார். ஆளுநர் விழாவை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்தார்.

Related Stories: