மும்பையில் நடந்த அநியாயம்; 400 மீட்டர் பயணத்திற்கு ரூ.18,000 கட்டணம் வசூல்: அமெரிக்க பெண் அதிர்ச்சி; டாக்ஸி ஓட்டுநர் கைது

மும்பை: மும்பை விமான நிலையத்திற்கு அருகே 400 மீட்டர் பயணத்திற்கு ஒரு அமெரிக்கப் பெண்ணிடம் ரூ.18,000 வசூலிக்கப்பட்டதாக அவர் ஆன்லைனில் புகார் அளித்ததைத் தொடர்ந்து டாக்ஸி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவை சேர்ந்தவர் அர்ஜென்டினா அரியானோ. இவர் கடந்த ஜன.12 அன்று மும்பை வந்திருந்தார். மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலிருந்து ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குச் செல்வதற்காக சுமார் 400 மீட்டர் பயணிக்க டாக்சியில் சென்றார். ஆனால் டாக்சி டிரைவர் அவரை நேரடியாக ஓட்டலுக்கு அழைத்துச் செல்லாமல், அந்தேரி கிழக்கு பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் சுற்றித் திரிந்து, பின்னர் அதே ஓட்டலில் இறக்கிவிட்டு, அவரிடம் ரூ.18,000 (சுமார் 200 அமெரிக்க டாலர்) கட்டணமாக வசூலித்துள்ளார்.

அதன்பின் புனே சென்ற அந்த பெண் அங்கிருந்து அமெரிக்கா சென்றுவிட்டார். பின்னர் ஜனவரி 26 அன்று இந்தச் சம்பவத்தை தனது ‘எக்ஸ்’ தளத்தில் எழுதினார். அதில் டாக்சி ஓட்டுநரும் அவரது கூட்டாளியும் முதலில் தன்னை ஒரு அறியாத இடத்திற்கு அழைத்துச் சென்று பணம் கேட்டு, பின்னர் விமான நிலையத்திற்கு மிக அருகில் இருந்த ஓட்டலில் இறக்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அவரது பதிவு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது. இது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், மும்பை காவல்துறையின் கவனத்தையும் ஈர்த்தது.

இதையடுத்து தானாக வழக்குப்பதிவு செய்த மும்பை காவல்துறை அந்த பெண்ணின் பதிவில் பகிரப்பட்ட டாக்ஸியின் பதிவு எண்ணைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர் 50 வயதான தேஷ்ராஜ் யாதவ் என்ற ஓட்டுநர் என்பதை கண்டறிந்து எப்ஐஆர் பதிவு செய்த மூன்று மணி நேரத்திற்குள் தேஷ்ராஜ் யாதவைக் கைது செய்து, அவரது டாக்ஸியையும் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டாவது நபரைத் தேடி வருகின்றனர். மேலும், ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கையையும் தொடங்கி உள்ளனர்.

Related Stories: