புதுடெல்லி: யூடியூபர் சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது. யூடியூபர் சங்கர் மீது தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளின் கீழ், இதற்கு முன்பு அவரது அலுவலகத்தை போலீசார் பூட்டி சீல் வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு மருத்துவ காரணங்கள் மற்றும் சிகிச்சை பெறுவதை அடிப்படையாகக் கொண்டு ஏற்கனவே நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. இந்நிலையில், போலீசார் விசாரணை என்ற பெயரில் தன்னை அடிக்கடி காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைக்கழிப்பதாக கூறி, தனது ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு கோரி சங்கர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ‘சங்கர் தொடர்பான வழக்கு வாரம் ஒருமுறை உச்ச நீதிமன்றத்திற்கு வருவது ஏன், அவர் என்ன தான் செய்கிறார்? சட்டத்திற்கு எதிராக ஏன் செயல்படுகிறார்’ என்று நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர். மேலும் அவர் ஜாமீன் விதிமுறைகளை மீறி பல்வேறு வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததையும், செல்போனை காட்டி பொதுவெளியில் வழக்கு விசாரணைகள் குறித்து பேசியதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘வழக்கை மூலதனமாக கொண்டு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியது ஏற்கத்தக்கதல்ல’ என்று கடும் கண்டனம் தெரிவித்தனர். சங்கரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் உங்களது ஜாமீனை உயர்நீதிமன்றம் இன்னும் ரத்து செய்யவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ என்று எச்சரித்து அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.
