கருத்துக்கணிப்பில் வெளியான பரபரப்பு தகவல்; தமிழகத்தில் மீண்டும் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி: எதிர்கட்சிகள் ஆளும் கேரளா, மேற்குவங்கத்திலும் பாஜகவுக்கு வாய்ப்பில்லை

 

புதுடெல்லி: ‘இந்தியா டுடே’, ‘சி-வோட்டர்’ நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் இந்தியா கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை முக்கியப் பிரச்னைகளாக உள்ளதாக முறையே 20 சதவீதம் மற்றும் 17 சதவீதம் பேர் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி மொத்தமாக 39 இடங்களையும் கைப்பற்றி பெரும் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், இக்கூட்டணிக்கு 35 முதல் 36 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மக்கள் மனநிலை குறித்து ‘இந்தியா டுடே’ மற்றும் ‘சி-வோட்டர்’ நிறுவனம் இணைந்து புதிய கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. இம்மாத நிலவரப்படி தற்போது தேர்தல் நடைபெற்றால், தமிழகத்தில் ‘இந்தியா’ கூட்டணி மீண்டும் தனது பலத்தை நிரூபிக்கும் எனத் தெரியவந்துள்ளது. மாநிலத்தின் மொத்தமுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 38 இடங்களை ‘இந்தியா’ கூட்டணி கைப்பற்றும் என இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில் தேசிய ஜனநாயக கூட்டணியான என்டிஏ அணிக்கு (அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள்) ஒரே ஒரு தொகுதி மட்டுமே கிடைக்கும் என்றும், மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான கணிப்பில் என்டிஏ கூட்டணிக்கு 2 முதல் 3 இடங்கள் வரை கிடைக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள முடிவுகளில் அக்கட்சிக்கான ஆதரவு குறைந்து ஒரு இடமாக சுருங்கியுள்ளது. ‘இந்தியா’ கூட்டணியைப் பொறுத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் கணிக்கப்பட்ட எண்ணிக்கையை விட, தற்போது கூடுதல் இடங்களைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ‘இந்தியா’ கூட்டணி தொடர்ந்து தனது ஆதிக்கத்தை வலிமையாகத் தக்கவைத்துக் கொண்டுள்ளது உறுதியாகியுள்ளது. வாக்கு சதவீதத்தை ஆய்வு செய்கையில், ‘இந்தியா’ கூட்டணிக்கு 45 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு பெற்ற 47 சதவீதத்தை விடவும், ஆகஸ்ட் மாதம் கணிக்கப்பட்ட 48 சதவீதத்தை விடவும் குறைவாகும்.

அதேபோல் என்டிஏ கூட்டணியின் வாக்கு வங்கியும் 33 சதவீதமாகக் குறையும் எனத் தெரிகிறது. கடந்த தேர்தலில் 41 சதவீதமும், ஆகஸ்ட் மாத கணிப்பில் 37 சதவீதமும் இருந்த ‘என்டிஏ’ ஆதரவு தற்போது மேலும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் 12 சதவீதமாக இருந்த மற்றவர்களின் வாக்கு வங்கி, ஆகஸ்ட் மாதத்தில் 15 சதவீதமாகவும், தற்போது 22 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இதில் தவெக கட்சியின் பங்கு மட்டும் ‘15 சதவீதம்’ இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்கு சதவீதத்தில் மாற்றங்கள் இருந்தாலும், அதனைத் தொகுதிகளாக மாற்றுவதில் ‘இந்தியா’ கூட்டணி முன்னிலையில் உள்ளதையும், ‘என்டிஏ’ கூட்டணிக்கு போதிய வரவேற்பு இல்லை என்பதையும் இந்த முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. கடந்த சில மாதங்களாகவே தேசிய அரசியலில் கடும் போட்டி நிலவி வந்த சூழலில், மக்களின் மனநிலை குறித்த பல்வேறு யூகங்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே வாக்கு வங்கி வித்தியாசங்கள் குறைவாகவே காணப்பட்டன.

இந்நிலையில் தற்போது இந்தியா டுடே மற்றும் சிவோட்டர் நிறுவனம் இணைந்து ‘மூட் ஆப் தி நேஷன்’ என்ற பெயரில் மெகா கருத்துக்கணிப்பை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது தேர்தல் நடைபெற்றால், ஒன்றிய அரசில் ஆளும் என்டிஏ கூட்டணி 352 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரியவந்துள்ளது. இதில் பாஜக மட்டும் தனித்து 287 இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் பலம் குறைந்து 182 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வேட்பாளராகச் செயல்படத் தகுதியானவர் யார் என்ற கேள்விக்கு, 55 சதவீதம் பேர் மோடியையே தேர்வு செய்துள்ளனர். இது கடந்த ஆகஸ்ட் மாதம் இருந்த 52 சதவீதத்தை விட அதிகமாகும். ராகுல் காந்திக்கு 27 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு அளித்துள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை ஒன்றிய அரசு கையாளும் விதம் ‘நன்றாக உள்ளது’ என 49 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விட, பொருளாதாரத்தை மோடி சிறப்பாகக் கையாள்வதாக 54 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இருப்பினும் விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை முக்கியப் பிரச்னைகளாக உள்ளதாக முறையே 20 சதவீதம் மற்றும் 17 சதவீதம் பேர் கவலை தெரிவித்துள்ளனர். தேசிய அளவில் பாஜக கூட்டணி வலுப்பெற்று வந்தாலும், விரைவில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணி தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து செலுத்தி வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியா கூட்டணி 38 இடங்களைக் கைப்பற்றி ‘கிளீன் ஸ்வீப்’ செய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்தியா கூட்டணியின் ‘மிகவும் பலவீனமான இணைப்பு’ என்று காங்கிரஸை 62 சதவீதம் பேர் சுட்டிக்காட்டியுள்ளனர். நாடாளுமன்றத்தில் கூட்டணி ஒற்றுமையாக இருந்தாலும், மாநில அளவில் கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததே எதிர்க்கட்சிகளின் பின்னடைவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக அந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரிக்கின்றன.

 

Related Stories: