அஞ்சரை மணி நேர ஆட்டம்: அல்காரஸ் அட்டகாச வெற்றி; டென்னிஸ் வரலாற்றில் நீ…ண்ட செமிபைனல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் நேற்று, ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் ஐந்தரை மணி நேரம் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டி ஒன்றில் ஸ்பெயினை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ் (22) – ஜெர்மனை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (28) மோதினர். இப்போட்டியின் முதல் செட்டில் அட்டகாசமாக ஆடிய அல்காரஸ் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார்.

ஆனால் அடுத்த 3 செட்களில், ஸ்வெரெவ் கடும் சவால் எழுப்பியதால் அந்த செட்கள் டைபிரேக்கர் வரை நீண்டன. 2வது செட்டை 7-6 (7-5) என்ற புள்ளிக் கணக்கில் அல்காரஸ் வசப்படுத்தினார். இருப்பினும் 3 மற்றும் 4வது செட்களை 7-6 (7-3), 7-6 (7-4) என்ற புள்ளிக்கணக்கில் ஸ்வெரெவ் கைப்பற்றியதால் 2-2 என்ற செட் கணக்கில் போட்டி சமநிலையில் இருந்தது. அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் வகையில் நடந்த கடைசி செட்டில் அல்காரஸ் அட்டகாசமாக ஆடி 7-5 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். அதனால், 3-2 என்ற செட் கணக்கில் வெற்றிவாகை சூடிய அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 5 மணி நேரம் 27 நிமிடங்கள் நடந்த இப்போட்டி, டென்னிஸ் வரலாற்றில் மிக நீண்ட நேரம் நடந்த அரை இறுதிப் போட்டியாக சாதனை படைத்தது.

* பைனலில் ஜோகோவிச்: சின்னர் சரண்டர்
ஆஸ்திரேலியன் ஓபன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் நேற்று செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் (38 வயது, 4வது ரேங்க்), இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரரான ஜானிக் சின்னருடன் மோதினார். நேற்றைய ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த ஜோகோவிச் முன் சின்னர் திணறலுடன் ஆடினார். முதல் மற்றும் 3வது செட்களை சின்னரும், 2 மற்றும் 4வது செட்களை ஜோகோவிச்சும் மாறி மாறி கைப்பற்றினர். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டை, சிறப்பாக ஆடிய ஜோகோவிச் வசப்படுத்தினார். அதனால், 3-6, 6-3, 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிவாகை சூடிய ஜோகோவிச் இறுதிப் போட்டியில் அல்காரசுடன் மோதவுள்ளார்.

Related Stories: