வேன் மீது லாரி மோதி பெண் உட்பட 2 பேர் பலி

*3 பேர் படுகாயம்

நல்லம்பள்ளி : ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா பழைய மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி(53). இவரது குலதெய்வ கோயில் சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ளது. குல தெய்வ வழிபாட்டுக்காக 30க்கும் மேற்பட்ட உறவினர்களுடன், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, வேனில் சேலம் நோக்கி சாவித்திரி புறப்பட்டுள்ளார்.

ஆரணி தாலுகா, பையூர் பகுதியைச் சேர்ந்த குமரேசன்(34) என்பவர் வேனை ஓட்டி வந்துள்ளார். நேற்று அதிகாலை 4 மணியளவில், கிருஷ்ணகிரி- சேலம் பைபாஸ் ரோட்டில் உள்ள தடங்கம் நீதிமன்றம் முன்பு வந்தபோது, இயற்கை உபாதை கழிப்பதற்காக வேன் நிறுத்தப்பட்டது.

அப்போது ஜவுளி லோடு ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பைபாஸ் ரோட்டில் நின்று கொண்டிருந்த வேன் மீது வேகமாக மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேன் முழுவதும் நொறுங்கியது. வேனில் இருந்த சாவித்திரி, டிரைவர் குமரேசன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், வேனில் இருந்த தருண்(15), கண்ணு(42), மாதிரை(39) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், இது குறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த 2 பேரின் சடலங்களையும் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில், லாரியில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: