*கண்டு கொள்ளாத ரயில்வே நிர்வாகம்
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் – கோவை மெமு ரயிலில் படிக்கட்டு பயணத்தால் விபத்து அபாயம் நீடிக்கும் நிலையில் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து பணி நிமித்தமாகவும், பள்ளி, கல்லூரி செல்வதற்காகவும், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வதற்காகவும் என நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் பொது போக்குவரத்தான பேருந்துகளை நாடி வந்தனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்ல சுமார் ஒரு பயணிக்கு ரூ.30 வரை செலவிட வேண்டிய நிலை இருந்தது. மேலும், பயண நேரமும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிறது. இதனை தவிர்க்க மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் பயணிகள் ரயிலில் செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு கடந்த 2019 ம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு பயணிகள் மெமு ரயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை கடந்த 2020 ம் ஆண்டு கொரோனா பரவல் காலகட்டங்களில் நிறுத்தப்பட்டது. கொரோனா காலகட்டம் முடிந்த பிறகு இந்த ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. அப்போதும், இந்த மெமு ரயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலில் ஒரு பெட்டிக்கு தோராயமாக 200 பேர் வீதம் 8 பெட்டிகளில் 1600 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால்,தற்போது சுமார் 3800 பேர் வரை பயணித்து வருகின்றனர்.
இதனால் போதிய இட வசதியின்றி பலர் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் தொங்கிச்செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து ரயில்வே பயணிகள் நலச்சங்கத்தினரும், பயணிகளும் கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரி பலமுறை ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் இந்த ரயிலில் கோவை ஜங்ஷன் சென்று பின்னர் அங்கிருந்து நடந்தே சென்று விடலாம்.
இதனால் இந்த ரயிலில் செல்வதை பெரும் வரப்பிரசாதமாக நினைத்து வரும் நிலையில் நாள்தோறும் 3,800 பயணிகள் வரை இட நெருக்கடியுடன் பயணிப்பதால் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், பணி நிமித்தமாக கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்வோரும் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் நிலை தொடர்ந்து வருகிறது.
எனவே, கூடுதல் பெட்டிகளை இந்த மெமு ரயிலில் இணைக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள், ரயில்வே பயணிகள் நலச்சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
