போடி அருகே பரமசிவன் மலைக்கோயில் அடிவாரம் பகுதியில் ரூ.1 கோடியில் புதிய சாலை, பாலம் பணிகள் நிறைவு

*பொதுமக்கள் மகிழ்ச்சி

போடி : போடி அருகே பரமசிவன் மலைக்கோயில் அடிவாரம் பகுதியில் ரூ.1 கோடியில் புதிய சாலை, பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அம்பிகா உடனுறை பரமசிவன் மலைக்கோயில் அமைந்துள்ளது. போடி சுப்புராஜ் நகரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இந்த மலைக் கோயிலுக்கு நடந்து செல்லும் மண் பாதையாக இருந்தது.

இந்த கோயிலில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் இந்த மண் சாலையை பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர். மேலும் 3 கிலோமீட்டர் தூரச்சாலையில் இருக்கும் இந்த மலைக்கோயிலுக்கு போடி பஸ் நிலையத்தில் இருந்து முந்தல் சாலை வழியாக உள்ள திருவிழா நேரத்தில் மட்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

அதேபோல் பரமசிவன் கோயிலுக்கு பின்புறம் அதிகளவில் விவசாயம் இருப்பதால் விவசாயிகளும் தொழிலாளர்களுமே தினம்தோறும் இச்சாலையில் சென்று தங்களின் பணிகளை செய்து பல்வேறு சிரமங்களில் சென்று திரும்புகின்றனர். இதற்கிடையில் மழை காலங்களில் அதிக அளவு மழைநீர் காட்டாறு வெள்ளமாக இந்த மண்சாலையில் திரண்டு வருவது வழக்கம்.

இந்த தண்ணீரின் வேகம் அடுத்துள்ள மெகா ஓடையான வஞ்சியோடையில் சென்று கடக்கும். ஆனால் பொதுமக்கள் பக்தர்கள் நீண்ட வருடங்களாக இந்த மண் சாலையில் புதிய தார் சாலை அமைத்து, மழைநீர் பாயும் வாய்க்கால் ஓடை குறுக்கே பாலம் கட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையாக விடுத்திருந்தனர். இதனை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வனிடமும் கோரிக்கையாக வைத்தனர்.

இதனையடுத்து தேனி எம்பி தங்க தமிழ்செல்வன் இந்த கோயிலின் சிறப்பு தன்மையை எடுத்துரைத்து சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கி தர வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கையாக முன் வைத்தார்.

இதனையடுத்து ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவங்க உத்தரவிட்டார். அதோடு போடி நகர் மன்றத்திலும் நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமையிலும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து பூமிபூஜையுடன் பணிகள் தொடங்கின. இதற்கு நடுவே சில காலம் சற்று பணிகள் தொய் வடைந்து சாலைகளில் சரளைகள் மட்டும் குவித்து பரத்தி சமப்படுத்தியும் சில இடங்களில் குவித்தும் தார்ச்சாலை பணிகள் துவக்காமல் தொய்வான நிலையில் இருந்தது. மேலும் தொடர்ந்து சாலையின் குறுக்கே மழை நீர் கடக்கும் பெரிய வாய்க்கால் பாதையில் குறுக்கே இன்னும் பாலம் கட்டுமான பணிகளும் துவங்காமல் ஏலம் எடுத்தவர்கள் காலதாமதம் செய்து வந்தனர்.

ஏற்கனவே பரமசிவன் மலைக்கோயில் பின்புறம் அதிகளவில் விவசாயம் நடைபெறுவதாலும், 18ம் கால்வாய் நீண்ட வாய்க்காலும் அப்பகுதியில் வருவதால் முக்கிய பகுதியாகவும் திகழ்ந்து வருகிறது. அதனால் இப்பகுதி விவசாய நிலங்களுக்கு விவசாயிகள், தொழிலாளர்கள் முந்தல் சாலையை சுற்றி செல்லாமல், சுப்புராஜ் நகர் இச்சாலையில் விரைந்து சென்று திரும்பும் முக்கிய சாலையாக இருப்பதால் பணிகள் விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் நகராட்சியில் இந்த தாமதம் குறித்து கேட்டபோது பரமசிவன் மலை அடிவாரத்தில் நீர்த்தேக்கம் இருப்பதால் மெயின் குழாய்கள் இவ்வழியாக கடக்கிறது. இதில் பழுது ஏற்பட்டு விடாமல் இருக்க அந்த இடம் தவிர்த்து மழைநீர் கடக்கும் கால்வாயில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாலம் கட்டும் பணிகள் துவங்கும் என நகராட்சி பொறியாளர் குணசேகரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலை குறித்து தினகரன் நாளிதழ் படத்துடன் செய்தியாக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பாக வெளியிட்டிருந்தது. அதன்படி செய்தி எதிரொலியால் நகராட்சி அறிவுறுத்தலின் பேரில் குழாய் பணிகளை விரைந்து முடித்து, தார்ச்சாலையும் அமைக்கப்பட்டு தயார் படுத்தப்பட்டது.

இதற்கிடையில் கால்வாயின் குறுக்கே கடந்த மாதம் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது பாலத்தின் இருபுறங்களிலும் சரளைகள் கொட்டி பாலத்தை இணைத்து பரத்தி அங்கு மட்டும் தார்ச்சாலை அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தற்போது பணிகள் முழுமையாக முடிவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருப்பதால் பொதுமக்கள், விவசாயிகள், பக்தர்கள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: