*செயல் அலுவலர் அறிவுறுத்தல்
கலவை : திமிரி பேரூராட்சியில் ‘என் குப்பை, என் பொறுப்பு’ என்ற அடிப்படையில், குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு செயல் அலுவலர் அறிவுறுத்தினார். திமிரி பேரூராட்சியில் உள்ள 15 வார்டு பகுதிகளில் உள்ள வீடுகளில் தினசரி தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை வீடு வீடாக தரம் பிரித்து சேகரிக்கும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், செயல் அலுவலர் சரவணன், நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்களிடம் குப்பைகளை முறையாக பிரிக்க தூய்மை பணியாளர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், திமிரி பேரூராட்சியில் உள்ள பொதுமக்கள் ‘என் குப்பை, என் பொறுப்பு’ என்ற அடிப்படையில், குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு செயல் அலுவலர் சரவணன் அறிவுறுத்தினார். அப்போது இளநிலை உதவியாளர் நவீன் குமார், தூய்மை பணி மேற்பார்வையாளர் முத்துசாமி, தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
