ஓசூர் தேர்ப்பேட்டை பச்சை குளத்தில் குப்பை கொட்டுவதால் சீர்கேடு

*பக்தர்கள் வேதனை

ஓசூர் : ஓசூர் தேர்ப்பேட்டையில் உள்ள பச்சை குளத்தில், பாசி படர்ந்து கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது என பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீது சந்திரசூடேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான பச்சை குளம் மலையடிவாரத்தில் தேர்ப்பேட்டை என்ற இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் தேர்த்திருவிழாவின் போது, இந்த குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.

விநாயகர் சதூர்த்தியின் போது, குளத்தில் சிலைகள் கரைக்கப்படும். பிரசித்தி பெற்ற இந்த குளத்தை, அவ்வப்போது தூய்மைபடுத்தாததால், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காலி மதுபாட்டில்கள், பாக்கு மட்டை தட்டுகள் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதே போல், பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்த பொருட்கள் அப்புறப்படுத்தாமல் உள்ளதால், சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘மிகவும் பழமை வாய்ந்த இந்த பச்சை குளம், காசி தீர்த்தம் என கருதப்படுகிறது. ஆனால், சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் சேகரமாகும், குப்பை கழிவுகளை இரவு நேரத்தில் குளத்தை சுற்றிலும் வீசி செல்கின்றனர்.

அந்த குப்பைகள் குளத்தில் வந்து தேங்குகிறது. இரவு நேரங்களில் குடிமகன்கள் குளத்து கரையில் அமர்ந்து மது அருந்தி விட்டு, காலி பாட்டில்களை குளத்தில் வீசிச் செல்கின்றனர். தேங்கி உள்ள குப்பை கழிவுகளை அகற்றுவதில்லை.

இதனால் குளம் அருகே செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. விரைவில் தேர்த் திருவிழா நடைபெற உள்ளதால், குளத்தில் உள்ள தண்ணீரை முற்றிலும் வெளியேற்றி விட்டு, புதிய தண்ணீரை விட வேண்டும்,’ என்றனர்.

Related Stories: