*சீரமைக்க கோரிக்கை
குளத்தூர் : முத்துராமலிங்கபுரம், த.சுப்பையாபுரத்தில் சிதிலமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கும் சாலையை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். குளத்தூர் அருகே உள்ளது முத்துராமலிங்கபுரம், த.சுப்பையாபுரம் கிராமங்கள்.
இப்பகுதி முழுவதும் வானம்பார்த்த விவசாய பூமிதான், வருடத்தின் 9 மாதங்கள் விவசாயப் பணிகள் நடக்கும். விவசாயத்திற்கு தேவையான பொருட்களை குளத்தூர், விளாத்திகுளம், கோவில்பட்டி போன்ற பகுதிகளுக்கு இங்கிருந்து சென்று வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் இருந்து த.சுப்பையாபுரம் செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் சாலை கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்று காட்சியளிக்கிறது. இதனால் இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாயப் பணிகளுக்கு இங்கிருந்து செல்லவும், மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கும் பெரும்சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொண்டதாக தெரியவில்லை. எனவே இப்பகுதி மாணவர்கள், விவசாயிகளின் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
