*அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
ஏரல் : ஏரலில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. அப்போது வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 3வது பெரிய வணிக நகரமான ஏரலில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றிட வியாபாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.
தொடர்ந்து நேற்று ஏரல் தாசில்தார் செல்வகுமார், மண்டல தாசில்தார் மாரியம்மாள், ஆர்ஐ பிரபாவதி, சிறுத்தொண்டநல்லூர் விஏஓ கார்த்திகேயன், தலையாரி விக்னேஷ், சர்வேயர் முருகானந்தம், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் மலர்விழி, இளநிலை பொறியாளர் ரஞ்சித்குமார், சாலை ஆய்வாளர்கள் சோபியா, ஸ்ரீதேவி, போலீசார் மற்றும் சாலை பணியாளர்கள் ஏரல் சிவன் கோயில் அருகே இருந்து பாரதியார் ரோட்டில் மேற்கு பக்கமாக ரோட்டில் தென்கரை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஜேசிபி மூலம் உடைத்து அகற்றினர்.
அப்போது கடை முன்பு போட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் சீட்டுகள், தகர அடைப்புகளை வியாபாரிகள் அகற்ற முயன்றனர். எனினும் ஜேசிபி மூலம் இடித்து அகற்றியதால் அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் இன்ஸ்பெக்டர் சபாபதி பேச்சுவார்த்தை நடத்தினார். தங்களுக்கு அவகாசம் அளித்தால் ஆக்கிரமிப்புகளை அகற்றி விடுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள டிரான்ஸ்பார்ம் மற்றும் மின் கம்பங்களை அகற்றினாலே இப்பகுதியில் போக்குவரத்து பிரச்னை ஏற்படாது என்றும் கூறினர்.
இதையடுத்து நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் போலீசார் பேசி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நிறுத்தினர். நாளை(வெள்ளிக்கிழமை) வியாபாரிகள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இல்லையெனில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடரும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஏரல் மின் துறை அதிகாரிகளிடம் சாலை போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் அனைத்தையும் மாற்றி நட ஏற்பாடு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டது.
