கோவை: கோவையில் நடைபெற்று வரும் ஜவுளி தொழில் மாநாட்டில் 13,080 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.915 கோடி மதிப்பிலான 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின. இந்த விழாவில் பேசிய அவர், ஜவுளித்துறையில் அதிக முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார். கோவை கொடிசியா அரங்கில் தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் முதலாவது ‘ஜவுளி தொழில் மாநாடு 360’ நேற்று துவங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் 55 ஜவுளி உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் 13,080 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.915 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின. பின்னர் சிறந்த ஏற்றுமதிக்காக முதலிடம் பெற்ற 5 நிறுவனங்களுக்கு விருதுடன், தலா ரூ.2 லட்சம் பரிசுத்தொகையை அவர் வழங்கினார். மேலும், பழைய நூற்பு இயந்திரங்களை நவீனப்படுத்த ரூ.11.70 லட்சம் வட்டி மானியம், விசைத்தறிகளை நவீனப்படுத்த விசைத்தறியாளர்களுக்கு ரூ.67.49 லட்சம் மானியம், புதிய துணி நூல் பதனிடும் ஆலை துவக்க மூலதன முதலீட்டு மானியம் ரூ.10.92 கோடி வழங்குவதற்கான ஆணை ஆகியவற்றை அவர் வழங்கினார்.
ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்திற்காக மாநில அரசின் பங்குத்தொகையாக ரூ.1.30 கோடி மானியம் வழங்கும் ஆணையை வழங்கிய உதயநிதி ஸ்டாலின், தொழில்நுட்ப ஜவுளி மற்றும் செயற்கை இழைகள் தொடர்பான 6 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு மானியமாக ரூ.138.32 லட்சம் வழங்கும் ஆணையையும் வழங்கினார். இதையடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “தமிழ்நாடு இந்தியாவின் ஜவுளி பள்ளத்தாக்காக விளங்கி வருகிறது. கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் ஜவுளித்துறை மையமாக விளங்குகின்றன. 30 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் ஜவுளித்துறை மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. நாடு முழுவதும் ஜவுளித்துறையில் பணியாற்றும் பெண்களில் 42 சதவீதம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
திராவிட மாடல் அரசு ஜவுளித்துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய ஜவுளித்துறை பங்களிப்பு வழங்கும் என நம்புகிறேன். தமிழ்நாடு அரசின் ஆதரவு ஜவுளித்துறைக்கு எப்போதும் இருக்கும். ஜவுளித்துறையில் அதிக முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்து வருகிறது. இந்த மாநாட்டை துவங்கி வைப்பதில் மகிழ்ச்சி. மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார். இந்த மாநாட்டில் ஜவுளித் தொழில் தொடர்பான கண்காட்சி, பேஷன் ஷோ, வாங்குவோர்-விற்போர் சந்திப்பு, 5 கருத்தரங்குகள் மற்றும் விருதுநகரில் அமையவுள்ள பிஎம் மித்ரா ஜவுளிப் பூங்கா தொடர்பான விழிப்புணர்வு ரோடு ஷோ ஆகியவை நடைபெற்று வருகின்றன.
