சென்னை: பெருவாரியான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ரியல் எஸ்டேட் துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் என்று பொன்குமார் வலியுறுத்தியுள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் நலச் சங்கம் அமைப்பின் மாதவரம் தொகுதி நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் நல சங்கத்தின் நிறுவனத் தலைவருமான பொன்குமார் பங்கேற்று தொகுதி நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர் பேசுகையில், “ரியல் எஸ்டேட் தொழில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றக்கூடிய முக்கியமான துறையாகும்.
இன்றைக்கு தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் 11.19 விழுக்காடு பெற்று இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்வதற்கு காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அயராதப் பணி ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் இந்த பொருளாதார உயர்வுக்கு முக்கிய பங்களிப்பு அளித்திருப்பது இந்த ரியல் எஸ்டேட் துறையாகும். எனவே இந்த ரியல் எஸ்டேட் துறையைப் பாதுகாத்து தொழில் செய்பவர்களை மத்திய, மாநில அரசு ஊக்கப்படுத்த வேண்டும். இன்றைக்கு பெருவாரியான மக்களின் வேலை வாய்ப்பை அளிக்கக்கூடிய துறையான ரியல் எஸ்டேட் துறை உள்ளது. எனவே இந்த துறையில் ஏற்படக்கூடிய தடைகளை போக்கி எளிமைப்படுத்தி இந்தத் தொழிலை வளர்க்க வேண்டும். எனவே மத்தியிலும், மாநிலத்திலும் ரியல் எஸ்டேட் துறைக்கு தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
