சில்லி பாய்ன்ட்…

* மீண்டும் களம் காணும் செரீனா வில்லியம்ஸ்?
நியூயார்க்: டென்னிஸ் போட்டிகளில் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற, அமெரிக்காவை சேர்ந்த அதிரடி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (44), கடந்த 2022ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். இந்நிலையில், விளையாட்டு வீரர்களுக்கு நடத்தப்படும் ஊக்க மருந்து பரிசோதனை செய்து கொள்ள, செரீனா பதிவு செய்துள்ளதாக, சர்வதேச டென்னிஸ் ஒழுங்கு நிலை அமைப்பு கடந்த டிசம்பரில் தெரிவித்தது. இது, டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் செரீனாவை சந்தித்த நிருபர்கள், மீண்டும் விளையாட வருவீர்களா என கேட்டதற்கு, ‘எனக்கு தெரியாது. என்ன நடக்கிறது என பார்க்க போகிறேன்’ என பதில் அளித்தார். அதனால், செரீனா மீண்டும் டென்னிஸ் களத்தில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

* துப்பாக்கி சுடுதலில் வங்கதேசம் பல்டி
டாக்கா: இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டிகளில் ஆட மறுத்ததை அடுத்து, வங்கதேச கிரிக்கெட் அணி நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக, ஸ்காட்லாந்து அணி, அந்த போட்டிகளில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் ஆசிய ஏர் கன் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் வங்கதேச துப்பாக்கி சுடுதல் வீரர்கள் பங்கேற்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, வங்கதேசத்தை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர் ரொபியுல் இஸ்லாம், பயிற்சியாளர் ஷர்மின் அக்தர் உள்ளிட்டோர் அடங்கிய குழு இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது.

* ஸ்குவாஷ் ஆன் பையர் வேலவன் அபாரம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஸ்குவாஷ் ஆன் பையர் ஓபன் ஸ்குவாஷ் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த தேசிய சாம்பியன் வேலவன் செந்தில் குமார் (உலகளவில் 46ம் நிலை வீரர்) பங்கேற்று வருகிறார். நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்தின் டாம் வால்ஷ் உடன் அவர் மோதினார். முதல் செட்டை 12-14 என்ற புள்ளிக் கணக்கில் வேலவன் இழந்தபோதும் அடுத்த 3 செட்களையும், 11-8, 11-8, 11-6 என்ற புள்ளிக் கணக்கில் அவர் எளிதில் வசப்படுத்தினார். அதனால் அட்டகாச வெற்றி பெற்ற வேலவன் அடுத்த சுற்றில் மெக்சிகோவை சேர்ந்த, உலகின் 11ம் நிலை வீரர் லியோனல் கார்டெனாஸை எதிர்கொள்ள உள்ளார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் வீர் சோத்ரானி, ஹங்கேரி வீரர் பலாஸ் பர்காசை வீழ்த்தினார்.

Related Stories: